சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்ச்சியில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
நடப்பாண்டு 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சிங்கப்பூரிலுள்ள அலோஹா சாங்கி எனுமிடத்தில் சாங்கி காட்டேஜில் வைத்து சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரின் குடும்ப ஒன்றுகூடல் நடைபெற்றது. நிகழ்விடத்திற்கு உறுப்பினர்கள் வந்து சேர மதியம் 3 மணிக்கு பேருந்து வசதி செய்யபட்டிருந்தது. மாலை 4:45 மணிக்கு இமாம் ஜமாஅத்துடன் அஸர் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின்னர் குடுமப சங்கம நிகழ்வு துவங்கியது.
அனைவருக்கும் சிற்றுண்டியாக காயல் இஞ்சி டீயும், சமூசாவும் பரிமாறப்பட்டது. இரவு உணவுக்காக சகோதரர் ஈஸா ஜக்கரியாவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் உணவு சமைக்கும் பணிக்கு ஆயத்தமானார்கள். மற்ற உறுப்பினர்கள் நண்பர்களின் சந்திப்பில் சுவரஸ்யமாக கலந்துரையாடி மகிழ்ந்தனர். இன்னும் சிலர் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் போட்டியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தனியறைகளில் ஒன்றுகூடி ஊர் நடப்புகளை பகிந்து கொண்டிருந்தனர். மழலைகள் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடினர்.
சிறிதாக மழைச்சாரல் விழவே குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி துவங்கியது. அஹமது ஜமீல் மற்றும் எம்.எம். அப்துல்காதர் போட்டியை பொறுப்பேற்று வழிநடத்தினர். அனைத்து குழந்தைகளும் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியில் பங்கெடுத்தனர். வளையம் எறிதல், பந்து வைத்த கரண்டியை வாயில் வைத்து பந்து விழாத வண்ணம் நடப்பது, இருக்கையை கைப்பற்றுதல், தண்ணீர் நிறைத்தல், ஓவியம் போன்ற போட்டிகள் களைகட்டியது.
மஃரிப் வேளையில் பாங்கு சொல்லப்பட்டு ஹாஜி-பாளயம் முஹம்மது ஹஸன் அவர்கள் இமாமத் செய்ய உறுப்பினர்கள் கூட்டாக மஃரிப் தொழுகையை நிறைவேற்றினர். தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை காயலர் நலப்பணி திட்டங்களுக்க்கு வழங்குவதாக நீய்யத் செய்தனர்.
அவர்களிடமிருந்து நன்கொடையை பெறுவதற்காக வெண்ணிறத்தில் காலி கடித உறைகள் வழங்கப்பட்டன. உறைகளை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அனைவரும் தமது பங்கை செலுத்தினர். இதில்பெறப்படும் தொகை காயலர் நலப்பணி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அல்-ஹாஃபிழ் கே.எம்.எஸ் தைக்கா ஸாஹிப் திருமறை வசனங்களை ஓத, குழந்தைகளுக்கான பல்சுவை நிகழ்ச்சி இரவு 7;45 மணிக்கு துவங்கியது. மன்ற ஆலோசகர் ஹாஜி முஹம்மது ஹஸன் அவர்கள் நிகழ்ச்சி குறித்த அறிமுக உரை நிகழத்தினார். இதில் பங்கெடுத்த குழந்தைகள், தமக்கு மனப்பாடமான திருமறை வசனங்கள் மற்றும் அழகிய துஆக்களை ஓதியும், தெரிந்த ஹதீதுகளையும் ஒப்புவித்தனர். உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடன் மழலைகளின் குரலை செவிமடுத்திருந்தனர். அனைத்து குழந்தைகளும் தமது திறமையை நன்றாக வெளிப்படுத்தி அனைவரின் பாரட்டுதலைப் பெற்றனர்.
தொடர்ந்து வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு முன்னதாக நடைபெற்று முடிந்த ஆடவர், பெண்டிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து 2016 மன்றத்தின் நிகழ்வுகள் குறித்த புகைப்பட காட்சிகள் குறுந்திரையில் காண்பிக்கப்பட்டது. உறுப்பினர்கள் இமாம் ஜமாஅத்துடன் இஷா தொழுகையை நிறைவேற்றினர்.
அனைவருக்கும் இரவு உணவாக காயலின் பாரம்பரிய களரி சாப்பாடு பரிமாறப்பட்டது.
உறுப்பினர்களிடமிருந்து ஒருநாள் ஊதிய நன்கொடை சேகரிக்கப்பட்ட பெட்டி திறக்கப்பட்டன. அதில் உறுப்பினகளிடமிருந்து பெறப்பட்ட மொத்த தொகை இந்திய மதிப்பின்படி 1,75,000 (ஒரு இலட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்) என மன்றத்தின் கணக்காளர் முஹம்மது ரிஃபாயி அறிவித்தார். அத்தொகை மன்றத்தின் இருப்பு கணக்கில் சேர்க்கப்பட்டது.
இரவு 11.00 மணிக்கு சிலர் விடைபெற்று வீடு திரும்பினர். இரவு தங்கும் வசதி செய்யப்பட்டிருந்ததால் பெரும்பாலானோர் இரவில் தங்கியிருந்தனர். நள்ளிரவில் அவர்களுக்கு பார்பிக்யூ (சுட்ட கோழி) வழங்கப்பட்டது. ஆண்கள் ஆண்கள் பகுதியிலும் பெண்கள் பெண்கள் பகுதியிலும் இரவு நீண்ட நேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஸுப்ஹ் தொழுகைக்குப் பின் தேநீர் அருந்திய உறுப்பினர்கள் தத்தம் குடும்ப அங்கங்கத்தினருடன் கடற்கரையில் நடை பயிற்சி செய்வதற்காக புறப்பட்டனர். காலை உணவாக 7;30 மணிக்கு இடியாப்பமும், தேநீரும் பரிமறப்பட்டன.
சிறிது ஓய்வுக்கு பிறகு உறுப்பினர்கள் புறப்பட ஆயத்தமாயினர். 10:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் அனைவரும் மன நிறைவுடன் தமது இல்லம் திரும்பினர். எல்லா புகழும் இறைவனுக்கே!
நிகழ்வினை ஏற்பாடு செய்து திறம்பட செயல்படுத்திய ஏற்பாடு குழுவினருக்கும், சுவையான உணவுகளை குறித்த நேரத்தில் தயாரித்து வழங்கிய உணவு ஏற்பாடு குழுவினருக்கும் சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.N.L.முஹம்மது ரபீக்
(செய்தி தொடர்பாளர் – KWAS) |