திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில் – மகளிருக்கான சட்டங்கள் பற்றிய கருத்தரங்கம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
இந்நவீன உலகில் மகளிர் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றுக்குத் தம் பணியனுபவ அடிப்படையிலான தீர்வுகளையும் விளக்கிடும் நோக்கில் காயல்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மகளிருக்கான சட்டங்கள் பற்றிய கருத்தரங்கம், நேற்று (25.04.2017. செவ்வாய்க்கிழமை) 18.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரிகா, ஆறுமுகநேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆதிலட்சுமி ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
“சமூக ஊடகங்கள் வாயிலாக மகளிர் சந்திக்கும் பிரச்சினைகளும், அவற்றுக்கான தீர்வுகளும்” எனும் தலைப்பில் வழக்குறைஞர் சாத்ராக் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது மகளிர் காவல் நிலையத்தில் – மகளிர் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகள், அவற்றுக்கான காரணங்கள், அப்பிரச்சினைகள் வராமல் முற்கூட்டியே காத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை மதித்து, அவரவர் பொறுப்புணர்ந்து நடந்துகொண்டால், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய அவசியமே இருக்காது என, கருத்தரங்கத்தில் பேசிய அனைவரும் பொதுக் கருத்தாக வலியுறுத்தினர். அவையில் பேசிய அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சால்வை அணிவித்து கண்ணிப்படுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர், தம் மக்களுடன் பங்கேற்றனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கருத்தரங்கத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மகளிர் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆண் நிர்வாகிகள் கள ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். |