சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் 79ஆவது பொதுக்குழுக் கூட்டம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் & பல்சுவை நிகழ்ச்சிகளுடன் - குடும்ப சங்கம நிகழ்வாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
“காயல் நற்பணி மன்றம் – தம்மாம்” அமைப்பின் 79-வது பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்வு 14.04.2017 வெள்ளிக்கிழமையன்று இறையருளால் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 09:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை நடந்தேறிய இந்நிகழ்வில், சுமார் 185 நபர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி அறிவிப்பு
முன்னதாக, நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை மன்ற உறுப்பினர்களுக்கும் & சஊதி அரபிய்யாவின் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும், மன்றத்தின் வாட்ச்-ஆப் குழுமத்தின் மூலமாகவும் & இணையதள ஊடக செய்தியாகவும், மன்ற நிர்வாகக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டது. பின்னர் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களில், நிகழ்வினை செம்மையாக நடத்திடும் பொருட்டு, பல்வேறு உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு - நிகழ்விற்கான ஆயத்தப் பணிகளில் அக்குழுக்களின் உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபடலானர்.
நிகழ்விடம்
புல்வெளி மைதானம், நீச்சல் குளம், உள்ளரங்கு, சமையலறை & உணவுக்கூடம் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்ட “இஸ்திராஹா அல்-கல்ஃஅத்தன்” (Castle Recreation Center) நிகழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தம்மாம்-91 புறநகர் பகுதியிலுள்ள இந்த ஒய்வு விடுதியினை இலகுவாக வந்தடையும் வண்ணம், நகரின் மையப் பகுதியிலிருந்து (சந்தைப் பகுதி - Al Souq) வாகன ஏற்பாடு (வாகன வசதி இல்லாதவர்களுக்காக) செய்யப்பட்டிருந்தது.
வரவேற்பு & சிற்றுண்டி
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அன்பர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, குலுக்கலுக்கான சீட்டுகள் வழங்கப்பட்டன. அதனுடன், பல்வேறு விளையாட்டுகளுக்கான பெயர் பதிவும் நடைபெற்றது. அதன் பின், அனைவருக்கும் சுவையான காலை சிற்றுண்டி (இட்லி & உளுந்து வடை) பரிமாறப்பட்டது. நிகழ்விடத்தின் பிரதான பகுதியில், தண்ணீர், தேநீர் & குளிர்பானம் ஆகியன ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்தன.
வெளிப்புற விளையாட்டுகள்
துவக்கமாக, ஆடவர்கள் & சிறார்களுக்கான வெளிப்புற விளையாட்டுகள் நடைபெற்றன. மன மகிழ்வை ஏற்படுத்திய இவற்றுள், கால்பந்து உதைத்தல் (penalty shootout), சணற்பை ஓட்டப் பந்தயம் (gunny sack race), கையிறிழுக்கும் போட்டி (tug of war) & அதிர்ஷ்ட முனை (lucky corner) ஆகியன ஆண்களுக்கும் (பெரியவர்கள் & சிறுவர்கள்); ஊதற்பை வெடித்தல் (balloon bursting), இசை நாற்காலி (musical chairs), எலுமிச்சை & கரண்டி (lemon with spoon) & சணற்பை ஓட்டப் பந்தயம் ஆகியன இளவல்களுக்கும் (இரு பாலர்) நடத்தப்பட்டன. இது தவிர, சில அன்பர்கள் கைப்பந்து (volley ball) விளையாடியும் மகிழ்ந்தனர்.
ஜும்ஆ தொழுகை
வெளிப்புற விளையாட்டுகளுக்கு பின்னர், நிகழ்விடத்திற்கு மிக அருகாமையில் இருந்த “மஸ்ஜித் உரைஃப்பி”-யில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
நீச்சல் குளப் போட்டிகள்
உச்சி வெயிலின் தாக்கம் அதிகமிருந்த பொழுது, அன்பர்களில் பெரும்பாலானோர் நிகழ்விடத்திலிருந்த நீச்சல் குளத்தை முற்றுகையிட்டனர். குறுகிய தூர நீச்சல் (short distance swimming) & நீர் மூழ்குதல் (diving) ஆகிய நீச்சல் குளப் போட்டிகளில் - ஆர்வமுள்ளவர்கள் பலரும் பங்கேற்றமை, ஆனந்த குளியலில் ஈடுபட்டிருந்த ஏனையவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
நிகழ்விடத்தில், பெண்களுக்கான தனி நீச்சல் குள வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
காயல் களரி விருந்து
நீச்சல் அடித்து குளித்தும் - விளையாடியும் களைப்புற்றவர்களுக்கு, சுவையான காயல் களரி விருந்து பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களின் ஒன்றாக அமைந்திட்ட இந்த மனங்கவர் விருந்தினை, பெரியவர்களும் சிறுவர்களும் விரும்பி உட்கொண்டனர். அதனை சிறப்புற சமைத்த ‘உணவு ஏற்பாட்டு குழுவினருக்கு’, ரியாத் நகரிலிருந்து வருகைத் தந்த சகோதரர்களில் சிலரும் உதவி புரிந்தது பாராட்டுதலுக்குரியது.
மதிய உணவினைத் தொடர்ந்து, குளிர்ச்சியான பனிக்கூழ் (ice cream) வழங்கப்பட்டது.
உள்ளரங்க நிகழ்ச்சிகள்
உணவு இடைவேளைக்குப் பின்னர், உள்ளரங்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வர்ணம் தீட்டுதல் (coloring), நாணயங்களை எழுதுகோலின் மீது அடுக்குதல் (coin layering on a pencil), அருள்மறை மனனப் போட்டி (Al-Quran hifz competition) & நினைவுத்திறன் விளையாட்டு (memory game) ஆகியன குழந்தைகளுக்கு நடத்தப்பட்டன.
உள்ளரங்க நிகழ்வுகளாக, நினைவுத்திறன் விளையாட்டு & நிழற்பட வினாடி வினா (image quiz) ஆகியவை ஆடவர்களுக்கும்; மெளன மொழி (silent language), தக்காளி & பல்குத்தி (tomatto & toothpick), பஞ்சு & வாசலின் (cotton & vaseline), நிழற்பட வினாடி வினா & நாணயங்களை அடுக்குதல் ஆகியவை பெண்டிருக்கும் நடத்தப்பட்டன.
பெண்களுக்கான நிகழ்வுகளை மகளிர் ஒருங்கிணைப்புக் குழு செவ்வனே செய்திருந்தது.
பொதுக்குழுக் கூட்டம்
மாலை நேர சிறுகுடி-கடியாக பக்கோடாவும் தேநீரும் பரிமாறப்பட்ட பின்பு, மன்றத்தின் 79-வது பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ஜனாப் ரஃபீக் தலைமையேற்க, மன்ற உபதலைவர் ஜனாப் ஜியாவுதீன் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, செயலாளர் ஜனாப் இஸ்மாயீல் மன்றத்தின் செயல்பாடுகள் & எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த - கட்டிட வடிவமைப்பாளர் ஜனாப் ஜக்கரிய்யா, ரியாத் காயல் நல மன்ற தலைவர் ஜனாப் முஹம்மது நூஹு, ஜித்தா காயல் நல மன்ற பிரதிநிதி ஜனாப் ஹாமீது ரிஃபாய் & ஜனாப் நூஹு ஆலிம் ஆகியோர் - தத்தம் சிறப்புரைகளை சுருக்கமாக வழங்கினர்.
சஊதி அரபிய்யாவில் முதன் முதலாக துவங்கப்பட்ட காயல் நல மன்றம் நமது “காயல் நற்பணி மன்றம் – தம்மாம்” என்பதையும், இவ்வமைப்பின் சிறப்பான நலத் திட்டங்களை பாராட்டியும், நகரின் நலனுக்காக பாடுபடும் பல்வேறு நல மன்றங்களில் செயல்பாடுகள் குறித்த பொதுவான தகவல்களையும், இம்மன்றங்கள் முறையாக செயல்பட தேவையான பொருளதவி & மன்ற உறுப்பினர்களின் உடலுழைப்பு குறித்த விழிப்புணர்வும் இவர்களின் சொற்பொழிகளில் இடம்பெற்றன.
பரிசளிப்பு விழா
பல்வேறு உள்ளரங்க & வெளிப்புற விளையாட்டுகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் & குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரை
நிகழ்ச்சியின் இறுதியில், மன்ற செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஜனாப் அபூபக்கர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்விற்காக தம்மாம், அல்-ஃகொபர், ஜுபைல் & ரஹிமா ஆகிய பகுதிகளிலிருந்து வருகைத்தந்த அன்பர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக நன்றியினை நவிழ்ந்தார்.
குடும்பத்தோடு மழலைகளையும் அழைத்து வந்தோருக்கும், ரியாத் & ஜித்தா காயல் நல மன்றங்களின் சார்பாக பங்கேற்ற சகோதரர்களுக்கும் & ஏனைய சிறப்பு விருந்தினர்களும் நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இந்நிகழ்ச்சிக்காக பொருளுதவி புரிந்த & உழைத்த அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கும் [குறிப்பாக ‘உணவு ஏற்பாட்டுக் குழு’ அங்கத்தினருக்கு] மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கினார்.
மழலைகளுடன் பங்கேற்ற அன்பர்களில் ஒரு சிலர்...
நிகழ்ச்சிக்காக உழைத்தவர்களில் ஒரு சிலர்...
இறுதியாக துஆ கஃப்பாராவுடன் பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுக்கள்
நிதி திரட்டுதல்: ஜனாப் நூர்தீன் & குழுவினர்
உணவு ஏற்பாடு: ஜனாப் ஜியாவுதீன் & குழுவினர்
பொது சேவைகள்: ஜனாப் அபூபக்கர் & குழுவினர்
வரவேற்பு & பெயர் பதிவு: அல்-ஹாஃபிழ் இஸ்மாயீல் & குழுவினர்
மேடை & அரங்க ஏற்பாடு: ஜனாப் புஹாரி & குழுவினர்
ஒலி & காணொளி: ஜனாப் பிலால் & குழுவினர்
பரிசுப் பொருட்கள்: ஜனாப் நவ்ஃபல் & குழுவினர்
உள்ளரங்க நிகழ்ச்சிகள்: ஜனாப் பஷீர் & குழுவினர்
வெளிப்புற விளையாட்டுகள்: ஜனாப் சதக்கத்துல்லாஹ் & குழுவினர்
போக்குவரத்து & பாதுகாப்பு: ஜனாப் காசிம் & குழுவினர்
மகளிர் ஒருங்கிணைப்பு: ஜனாபா ராபியா அபூபக்கர் & குழுவினர்
நிழற்பட செருகேடு (Photo Album)
நிகழ்வு தினத்தன்று எடுக்கப்பட்ட அனைத்து நிழற்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக (high-resolution images) பதிவிறக்கம் செய்திட கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்கவும்:
https://www.irista.com/gallery/vrb5jrfufc6k
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & நிழற்படங்கள்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செயற்குழு உறுப்பினர்
|