செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 102-வது செயற்குழு கூட்டம் கடந்த 21- 04- 2017 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு, ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருட்பெருங்கிருபையால் செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 102-வது செயற்குழு கூட்டம் கடந்த 21- 04 - 2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ. எஸ். ஹெச். அப்துல்காதர் தலைமை ஏற்று நடத்த சகோ. ஓ. எப். செய்யது முஹம்மது ஷாதுலி இறைமறை ஓத சகோ. ஏ. எம். செய்யது அஹ்மது வருகை தந்த அனைவரையும் அகமகிழ வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் சகோ. எஸ்.ஏ.கே.முஹம்மது மீரா சாஹிப் அவர்களை பற்றிய அறிமுக உரையாற்றி, “இவர்கள் இம்மன்றம் ஆரம்பித்த கால கட்டத்தில் உறுதுணையாக இருந்த மூத்த உறுப்பினர். இப்போது தாயகத்தில் இருந்து புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற மீண்டும் வந்து நம் மன்ற செயல்பாடுகளை அவதானிக்க வந்தமைக்கு நன்றி கூறி வரவேற்பதுடன் அல்லாஹ் அன்னவரின் உம்ராதனை ஏற்றுக்கொள்வானாக” என துஆ செய்து மேலும் பொதுக்குழு உறுப்பினர் சகோ. கே.எம். அப்துல் ஹாதியையும் அகமகிழ வரவேற்று கொள்வதுடன் நமக்கெல்லாம் எத்தனையோ வேலைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி, இந்த நல்ல பணிக்காக நாமெல்லாம் இங்கு ஒன்று கூடிவுள்ளோம், இத்தனை வருடங்கள் நல்ல பல சேவைகளை தொய்வில்லாது மக்கள் நலப்பணிகள் செய்து வருகிறது என்றால் அது அல்லாஹ் நமக்களித்த பெரும் கருணையால்தான்”. என்றதுடன் இந்த கூட்டத்தில் நாம் முக்கியமாக கருத்து பரிமாற்றங்களை பகிர்த்து கொள்ளக்கூடிய சாரம்சம் என்னவென்பதையும் தெரிவித்தும் இம்மன்றம் பல பணிகளை செய்திட நாம் சந்தாக்களை விரைந்து செலுத்திட உறுப்பினர்களை ஆர்வப்படுத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தனதுரையை நிறைவு செய்தார் செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
அதனையடுத்து மற்றொரு செயலாளர் சகோ. சட்னி. எஸ்.ஏ.கே. செய்யது மீரான், “இந்த செயற்குழுவில் கலந்து சிறப்பிக்கும் ஆரம்பகால செயற்குழு உறுப்பினர், சகோ. எஸ்.ஏ.கே.முஹம்மது மீரா சாஹிப் அவர்களை சுற்றிக்காட்டி, “ஜித்தாவில் இந்த மன்றம் ஆரம்பிக்க உத்வேகத்துடன் செயல்பட்டு, நம் மண்ணின் மைந்தர்கள் எங்கெல்லாம் பணி செய்கிறார்களோ அவர்களை தேடிப்பிடித்தும் மேலும் துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றிய நமதூரின் நண்பர்களை அவர்களின் வசிப்பிடம் சென்று நேரடியாக சந்தித்து இதனால் உண்டாகும் பல தேவைகளையும் சேவைகளையும் எடுத்துக்கூறி ஆர்வமூட்டியதும்
இந்த நல்ல நேரத்தில் மலரும்நினைவுகளாக மகிழ்வுடன்
பகிர்ந்து கொள்வதாயும் மேலும் தொடர்ந்து கடந்த கூட்டத்தில் நடந்த கருத்துப் பரிமாற்றங்களையும், மேலும் நிறைவேற்றிய மன்றப்பணிகள்,வழங்கப்பட்ட தொகைகள் பயனாளிகளின் விபரம்மற்றும் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும், மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார்.
செயற்குழு உறுப்பினர் சகோ. சீனா. எஸ். ஹெச். மொகுதூம் முஹம்மது உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான “ஷிபா” மூலம் சமீபத்தில் நமதூரில் புதியதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையால்
முன்மொழியப்பட்டுள்ள “மக்கள் மருந்தகம்” பற்றிய விபரங்களையும், நம் மக்கள் எந்த அளவிற்கு அதன் பயன்பாட்டை பெறுகிறார்கள், மருத்துவர்கள் இந்த மருந்தகத்தை பரிந்துரை செய்கிறார்களா, அவ்வாறு செய்யும் பட்சத்தில் அனைத்து மருந்துகளும் கிடைக்கிறதா, என்பன போன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு நல்ல பல விளக்கங்களை தந்து அமர்ந்தார்.
கடந்த வாரம் ஏப்ரல்-14 வெள்ளியன்று நடைபெற்ற தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நம்மன்றம் சார்பாக
கலந்து சிறப்பித்ததும் மேலும் அந்த நிகழ்வுகள் சார்ந்த நல்ல தகவல்களையும் செயற்குழு உறுப்பினர் சகோ. எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாய் பகிர்ந்து கொண்டார்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பெறப்பட்ட சந்தா மற்றும் நன்கொடைகள் மேலும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் மருத்துவர் எம்.ஏ. முஹம்மது ஜியாத் முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. சமீபத்தில் விபத்தில் காயமுற்றவர், கர்ப்பப்பை அறுவைச் சிகிசைக்குள்ளானவர்கள், இருதய நோயாளிகளின் சிகிச்சை, மூட்டு வாதம், கால் மூட்டு அறுவைச் சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, நீரழிவு நோய் தொடர் சிகிச்சை, இரத்தம் உரையா தன்மை பாதிப்புக்குள்ளானவருக்கு சிகிச்சை, டெங்கு காய்ச்சல் சிகிச்சை, நுரையீரல் பாதிப்பு, காய்ச்சலால் வெட்டு வந்தவரின் தொடர் சிகிச்சை, மற்றும் கண் அறுவை சிகிச்சை என நோய் பாதிப்புக்குள்ளான நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 24 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ. எஸ்.ஏ.கே.முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் இம் மன்றத்தின் பணி
மிக போற்றத்தக்கது, நம் ஊர் மக்களுக்காக பலவித நற்சேவைகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். இம்மன்ற உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றங்கள் மிக ஆரோக்கியமான முறையில் அமைந்திருப்பதும், ஆரம்ப காலத்தில் இருந்ததை விட
மிகவும்உற்சாகமான முறையில் நடப்பதை நேரடியாக பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், உங்கள் பணி நல்லபடி தொய்வில்லாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி துஆ செய்து அமர்ந்தார.
சகோ. ஓ.ஏ.சி.கிஜார் சலாஹுத்தீன் நன்றி நவில சகோ. கே.ஏ. முஹம்மது நூஹு பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் உறுப்பினர்களின் நல்ல பல கருத்து பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்திற்கான முழு அனுசரனையும் சகோ. சட்னி. எஸ். எம். முஹம்மது லெப்பை செய்து இருந்தார்.
நம் மன்றத்தின் அடுத்த 103-ஆவது செயற்க்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வழமைப்போல் எதிர்வரும் 19-05-2017, வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு, ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெறும்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
30.04.2017.
|