காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO), “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இரண்டாவது முறையாக மேல் முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - பூங்காவிற்கு வடக்கே, CRZ விதிமுறைகள் உட்பட மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு சட்டங்களை மீறியும், நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியும் - குருசடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றிட, கடந்த சில மாதங்களாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, அரசின் பல்வேறு துறைகளுக்கும் மனுக்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளன.
CRZ விதிமுறைகள் மீறல் அடிப்படையில், இது தொடர்பான விசாரணை - சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரிடம் நிலுவையில் உள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு அடிப்படையிலான விசாரணைகள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் - வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்த வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, 2014 ஆம் ஆண்டு - தமிழக அரசின் வருவாய்த்துறை – அரசாணை (அரசாணை எண் 540 [வருவாய்த்துறை - டிசம்பர் 04, 2014) ஒன்றை வெளியிட்டிருந்தது;. அதன்படி, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோர், அதற்கு முன்பு - வருவாய்த்துறை மூலமாக தீர்வுகள் காண முயற்சி செய்ய - வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அவ்வழிமுறைகளின் படி, காயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடியை அகற்றி அப்புறப்படுத்திட - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக – திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியருக்கு 21.03.2017. அன்று மனு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு “நடப்பது என்ன?” குழுமம் அனுப்பிய மனு, வட்டாட்சியரின் நடவடிக்கைக்காக – 29.03.2017. அன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
“இது தொடர்பாக, ஆத்தூர் வருவாய்த் துறை ஆய்வாளர் விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது” என்ற பதிலை தவிர எவ்வித நடவடிக்கையும், திருச்செந்தூர் வட்டாட்சியரால் எடுக்கப்படவில்லை. ஆனால் அரசாணைப்படி - 60 நாட்களுக்குள் முழு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
வட்டாட்சியரால் 60 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாததால், அரசாணையின் வழிகாட்டுதல்படி - திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் (RDO), “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - முதல் மேல்முறையீடு, 05.06.2017. அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அரசாணைப் படி, 30 நாட்களுக்குள் - கோட்டாட்சியர் (RDO), காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் (DSP) மற்றும் சர்வே துறை அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழு, இப்புகார் மீது நடவடிக்கை எடுத்து, அதன் விபரங்களை - மனுதாரருக்கு வழங்க வேண்டும். ஆனால் - 30 நாட்களுக்கு மேலாகியும், கோட்டாட்சியர் - எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த குருசடி தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு நேரடியாகவும், மாவட்ட ஆட்சியர் மூலமும் கடிதம் அனுப்பியிருந்தது. அதன் மீது விசாரணை நடத்திய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், எவ்வித அனுமதியுமின்றி இக்கட்டுமானங்கள் அமைந்துள்ளது என்பதை உறுதிசெய்து, இதனை அப்புறப்படுத்தும்போது - சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என கருத்து தெரிவித்து, கோட்டாட்சியருக்கு கடிதம் எழுதி, உதவி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாணைப் படி - திருச்செந்தூர் கோட்டாட்சியரும், 30 நாட்களுக்கு மேல் ஆகியும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அந்த அரசாணையின் வழிகாட்டுதல் படி, தற்போது - தூத்துக்குடியில் உள்ள, மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO) – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக 2ஆவது மேல் முறையீடு அனுப்பப்பட்டுள்ளது.
இம்மனு மீது, DRO, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மற்றும் சர்வே துறை அதிகாரி கொண்ட குழு - 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற விதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 11, 2017;10:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|