திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து காயல்பட்டினம் வந்த பயணியரை, திருச்செந்தூரில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்துகள் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநரிடம், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள், காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பது குறித்து - கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தன்னார்வலர்களைக் கொண்டு - கடந்த ஜனவரி மாதமும், மே மாதமும் - 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்கள், தற்போது - உயரதிகாரிகளிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் போக்குவரத்து துறையின் செயலருமான திரு PWC டேவிடார் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS, வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்களிடம் – மே மாத பேருந்து கண்காணிப்பு அறிக்கை இதுவரை நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (10.07.2017. திங்கட்கிழமை) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம், இவ்வறிக்கை - கும்பகோணத்தில், “நடப்பது என்ன?” குழுவினரால் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டலத்திலிருந்து அன்றாடம் காயல்பட்டினம் வந்து செல்ல வேண்டிய 56 பேருந்துகளுள் – கடைசியாக மே மாதம் நடத்தப்பட்ட கண்காணிப்பின்போது 27 பேருந்துகள் மட்டுமே வந்து சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வறிக்கை தவிர, கடந்த ஜூலை 07 அன்று திருத்துறைப்பூண்டியிலிருந்து காயல்பட்டினம் வந்த ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர், கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்று – வெற்றி பெற்று, அதிராம்பட்டினத்திலிருந்து காயல்பட்டினம் வந்த ஒன்பது பேர், ஜூலை 09 அன்று புதுக்கோட்டையிலிருந்து காயல்பட்டினம் வந்த ஒருவர் ஆகியோர் திருச்செந்தூரில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அப்பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்திற்குள் செல்லாமல் மாற்றுப்பாதை வழியே சென்றுவிட்டன. இவைகுறித்த புகார் மனு, அவர்களின் பயணச் சீட்டு நகல்களுடன் மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
“வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்டுவது உட்பட - முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைவில் தகவல் தருவதாக - அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு:: ஜூலை 10, 2017; 11:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|