கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், உரிய ஆதாரங்களைக் காண்பித்து, தமது வைப்புத் தொகையைத் (டெபாசிட் தொகை) திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில், 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த சாதாரண உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் உறுப்பினர் தேர்தல் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட வைப்புத் தொகையை, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் உரிய ஆதாரத்துடன் விண்ணப்பம் செய்து, உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காயல்பட்டினம் நகராட்சிப் பொறுப்பிடங்களுக்குப் போட்டியிட விண்ணப்பித்தோர், தமது வேட்பு மனு ஆதாரங்களை காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் காண்பித்து, வைப்புத்தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும்.
|