காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள் குறித்த - 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை, சென்னையிலுள்ள அரசு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரடியாகச் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழியைப் புறக்கணிப்பது குறித்து கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினத்திற்குள் ஒரு நாளில் எத்தனை பேருந்துகள் வந்து செல்கின்றன என்பது குறித்து தெளிவாக அறிந்திடும் நோக்கில், “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் - இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டது.
[படங்கள்: கோப்பு]
இரண்டாவது முறையாக, “நடப்பது என்ன?” குழும ஏற்பாட்டில் – கடந்த மே மாதத்தில் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் - தொடர்புடைய துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் தற்போது நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
[படங்கள்: கோப்பு]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோரிடம் - முறையே, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நேரடியாகச் சென்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது, தமிழக அரசு போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலரும், கூடுதல் தலைமைச் செயலருமான திரு PWC டேவிடார் IAS அவர்களிடம் சென்னையிலும், வட்டார போக்குவரத்து அலுவரிடம் திருச்செந்தூரிலும் இவ்வறிக்கை நேரடியாக வழங்கப்பட்டு, உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.
இறைவன் நாடினால் - அடுத்த சில நாட்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் நிறுவனத்தின் கும்பகோணம், கோவை ஆகிய மண்டலங்களின் மேலாண்மை இயக்குநர்களிடம், அவ்விரு நகரங்களுக்கும் நேரடியாகச் சென்று – 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தப்படவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 6, 2017; 11:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |