காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை ஊக்குவித்து வருவதாகவும். கடற்கரை மேலாண்மை ஒழுங்கு (CRZ) விதிமீறல்களை மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்வதில்லை என்றும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது, மிக பெரிய நகரமாகும். சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட - இந்த கடலோர ஊரில், கடந்த சில ஆண்டுகளாக, புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக - கடலோர பகுதிகளில், இந்த குடியேற்றங்கள் - நடைபெறுகின்றன.
இது சம்பந்தமாக, பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் சார்ந்த பொது நல அமைப்புகள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு - பல்வேறு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் - திருச்செந்தூர் தாலுகாவை சார்ந்த, புறம்போக்கு நிலங்களை பாதுகாக்கும் கடமையை கொண்டுள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் - ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்வதில்லை; அவற்றை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்புரிந்து வருகிறார்கள்.
சட்டத்திற்கு புறம்பாக அமைந்துள்ள இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு - விதிமுறைகளை மீறி, மின்வாரியத்தினரால் மின்னிணைப்புகள் வழங்கப்படுகிறது; வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது; ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த குடியிருப்புகள் அனைத்துமே, CRZ விதிமுறைகள் - குடித்தனங்களை தடுத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.
சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து, மிகவும் அழகான கடற்கரை என பெயர்பெற்ற காயல்பட்டினம் கடற்கரை, தனது தனித்துவத்தை மெல்ல இழந்து வருகிறது; மக்கள் அமரும் பகுதி, கடலோர ஆக்கிரமிப்புகளால் குறுகி வருகிறது; எவ்வித கண்காணிப்புமின்றி, கட்டுப்பாடுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் படகுகள் - காயல்பட்டினம் கடற்கரையின், மக்கள் அமரும் பகுதிக்கு அருகே நிறுத்தப்படுகின்றன.
இவ்வாறு - கடலோர பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியமருவோர் பின்னணி தெரியவில்லை; இதனால், கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரிக்கும் அச்சம் எழுகிறது; நூற்றாண்டுகளாக அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் காயல்பட்டினத்தில், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் சூழல் தற்போது உருவாகிவருகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாச்சியர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரித்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; சமர்ப்பிக்கப்படும் மனு - வெவ்வேறு துறைகளுக்கு அனுப்பி, பந்தாடப்பட்டு - காலம் தாழ்த்தப்படுகிறது.
தற்போது மீன்வளத்துறை மூலமாக, CRZ விதிமுறைகள்படி அனுமதிப்பெறாமலேயே, மீன்பிடி இறங்கு தளம், காயல்பட்டினம் நகரின் சிங்கித்துறை பகுதியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடலுக்கு மிக அருகே, உச்ச நிலை அலை (HIGH TIDE LINE) மற்றும் குறைந்த நிலை அலை (LOW TIDE LINE) பகுதிகளுக்கு இடையில், CRZ விதிமுறைகள் தடை செய்துள்ள பகுதியில் - கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.
இது சம்பந்தமாக - மத்திய, மாநில அரசு சார்ந்த பல்வேறு துறைகளுக்கு அனுப்பட்ட புகார்களை தொடர்ந்து, சென்னையில் உள்ள சுற்றுச்சூழல்துறை இயக்குனர் திரு மல்லேசப்பா IFS, மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரையும் - சிங்கித்துறை பகுதியை பார்வையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.
இருப்பினும், கடந்த வாரம் - காயல்பட்டினம் சிங்கித்துறை, கொம்புத்துறை பகுதிகளில் மீன்பிடி தளம் திட்டங்களை பார்வையிட சென்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள், இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாக, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் CRZ ஒப்புதல் பெறாத இத்திட்டங்களை, துரிதப்படுத்திட கூறியிருப்பது - பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தமான விரிவான புகார், இன்று மாவட்ட ஆட்சியரிடம், காயல்பட்டினம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக - திங்கள் தின மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 3, 2017; 5:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|