காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய வெற்றுப் பணியிடங்களையும் நிரப்பிட, சென்னையிலுள்ள தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் – தமிழக அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் திரு. ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம் பல்வேறு தருணங்களில் முறையிட்டதைத் தொடர்ந்து, டாக்டர் ராணி டப்ஸ் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவராக சில ஆண்டுகளுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார்.
இம்மருத்துமனைக்கு, குறைந்தது நான்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். எஞ்சியுள்ள மருத்துவர் பணியிடங்களையும் நிரப்பிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமமும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பு, சென்னையிலுள்ள - தமிழக அரசின் மருத்துவ சேவைக்கான இயக்குனர் (DMS) திருமதி பானு அவர்களை, “நடப்பது என்ன?” குழுமம் நேரில் சந்தித்தது. தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வுகளின் மூலமாக டாக்டர் செல்வின் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதன்போது அவர் தெரிவித்திருந்தார்.
அதன் படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மருத்துவராக டாக்டர் செல்வின் கடந்த வாரம் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் வெற்றுப் பணியிடங்கள் நான்கிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.
டாக்டர் ராணி டப்ஸ் மற்றும் டாக்டர் செல்வின் தவிர, டாக்டர் கோகிலா - தற்காலிக, நியமன அடிப்படையில் (DEPUTATION) கடந்த சில மாதங்களாக - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
டாக்டர் ஜெஃப்ரீ, டாக்டர் சரஸ்வதி, டாக்டர் ஹேமலதா ஆகியோர் தற்போது காயல்பட்டினம் அரசு மருத்துமனை பணியில் இல்லாததைக் கருத்திற்கொண்டு, எஞ்சியுள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பிட, தமிழக அரசின் சுகாதாரத்துறையின் முதன்மை செயலர் திரு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக நேற்று (05.07.2017. புதன்கிழமை), குழும ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் சென்னையில் நேரில் மனு வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 6, 2017; 9:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|