காயல்பட்டினத்தில், பணி நிறைவு பெற்ற அஞ்சலருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் காயல்பட்டினம் அஞ்சலகத்தில் 38 ஆண்டு காலம் பணியாற்றி, தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார்.
அவரது சேவையைப் பாராட்டி, நகர மக்கள் சார்பில் வழியனுப்பு விழா, 30.06.2017. வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற சின்னத்துரையைப் பாராட்டி – அவருடன் காயல்பட்டினம் அஞ்சலகத்தில் இணைந்து பணியாற்றிய அலுவலர்கள், அவரது நண்பர்கள், பொதுச் சேவையில் உடன் களப்பணியாற்றியோர், காயல்பட்டினம் நகர மக்கள் சார்பில் – நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கே.வி.ஏ.டீ.கபீர், சாளை ஸலீம், ‘தாருத்திப்யான்’ நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.
பெற்ற மகனின் பணி நிறைவையொட்டி, சின்னத்துரையின் தாய் – தந்தை இருவருமிணைந்து அவருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினர்.
வாழ்த்திப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பணி நிறைவுபெற்ற சின்னத்துரை ஏற்புரையாற்றினார். இத்தனை ஆண்டு காலம் தனது அஞ்சல் சேவையில் உறுதுணையாயிருந்த அனைவருக்கும், ஒத்துழைத்த காயல்பட்டினம் நகர மக்களுக்கும் அவர் உருக்கமுடன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய அஞ்சலர் சந்திர சேகர் நன்றி கூறினார்.
இவ்விழாவில், சமூக ஆர்வலர்கள், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், அனைவருக்கும் – பணி நிறைவு பெற்ற சின்னத்துரை ஏற்பாட்டில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
|