தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் – காயல்பட்டினம் வழியில் செல்லும் பேருந்துகள் தொடர்பான தகவல் பலகை நிறுவவும், அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்டவும் - அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி மண்டலம்) ஒத்துழைக்கும் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் - காயல்பட்டினத்தைப் புறக்கணிப்பது குறித்து, கடந்த ஓர் ஆண்டாக, “நடப்பது என்ன?” குழுமம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வரும் பேருந்துகளின் எண்ணிக்கை நிலை குறித்து அறிந்திட, இவ்வாண்டு ஜனவரி, மே மாதங்களில் - 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பை (24 HOURS CITIZENS' BUS MONITORING) - தன்னார்வலர்களைக் கொண்டு, “நடப்பது என்ன?” குழுமம் நடத்தியது.
ஜனவரி மாத கண்காணிப்பின் முடிவுகள் - தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது - மே மாத கண்காணிப்பு முடிவுகளை, “நடப்பது என்ன?” குழுமம் - போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களை நேரடியாகச் சந்தித்து வழங்கி வருகிறது.
புதனன்று (ஜூன் 28) மதுரைக்கு நேரடியாகச் சென்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் இது தொடர்பான புள்ளிவிபரங்களடங்கிய மனு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூன் 30), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம், இது தொடர்பான மனு நேரடியாக வழங்கப்பட்டது.
நகர மக்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தகவல்களை விளக்கமாக கேட்டறிந்து கொண்ட நிர்வாக இயக்குநர், சில உத்தரவுகளைப் பிறப்பித்து, அக்கழகத்தின் துணை மேலாளரை (வணிகம்) சந்தித்து, கூடுதல் விபரங்களைத் தெரிவிக்கக் கூறினார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்ல வேண்டிய இடத்தில், 214 பேருந்துகள் மட்டுமே, காயல்பட்டினம் வழியில் வந்து செல்வது குறித்து - துணை மேலாளரிடம் எடுத்துரைக்கபப்ட்டது. விபரங்களைக் கேட்டுக்கொண்ட அவர், கிளை மேலாளரைத் தொடர்புக்கொண்டு, “காயல்பட்டினம் வழியைப் புறக்கணிக்கும் ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!” என அறிவிப்பு வெளியிடக் கூறினார்.
மேலும், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் - மாநகராட்சியின் ஒத்துழைப்போடு, காயல்பட்டினம் வழியில் பேருந்துகள் செல்ல வேண்டும் என்ற தகவல் பலகையை நிறுவிட ஒத்துழைப்பதாகவும், திருநெல்வேலி மண்டலத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் "வழி: காயல்பட்டினம்" ஸ்டிக்கர் ஒட்டிட ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 30, 2017; 11:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|