காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் பதின்பருவ இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் தந்திரமான முறையில் பெட்ரோலைத் திருடிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல் திருடத் திட்டமிடப்படும் இரு சக்கர வாகனத்திற்கடியில் இரண்டு லிட்டர் ப்ளாஸ்டிக் பாட்டிலை முட்டுக்கொடுத்து நிறுத்தி, அவ்வாகனத்தின் பெட்ரோல் குழாயைத் திறந்து பாட்டிலுக்குள் விட்டுவிட்டு, அது நிறையும் வரை அருகிலுள்ள சந்துகளில் ஒளிந்து காத்திருப்பதும், பாட்டில் நிறைந்துவிட்டாலோ அல்லது வாகனத்திலுள்ள பெட்ரோல் தீர்ந்துவிட்டாலோ, மெதுவாக பாட்டிலை எடுத்துச் சென்று, அடுத்த வண்டியைத் தேடத் துவங்கிவிடுகின்றனர்.
காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவில் நடைபெற்ற பெட்ரோல் திருட்டு நிகழ்வு குறித்து ஏற்கனவே காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. அது, உடனடியாக சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.
இவ்வாறிருக்க, இன்று நள்ளிரவில் காயல்பட்டினம் சித்தன் தெருவில் இதே போன்று இரு சக்கர வாகனங்களில் நூதன முறையில் பெட்ரோல் திருட்டு நடைபெற்றுள்ளது.
தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடப்படுவதையறிந்த அத்தெருவைச் சேர்ந்த ஒருவர் வேகமாக வெளியே சென்று திருடர்களைப் பிடிப்பதற்குள், அவர்கள் தமது உடமைகளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு ஓடி மறைந்துவிட்டனர்.
இன்று அதிகாலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினருக்கு அவர் தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் நிகழ்விடம் வந்து பார்வையிட்டு, நடந்தவற்றைக் கேட்டறிந்த பின், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறையினர், பெட்ரோல் திருடியோர் விட்டுச் சென்ற Hero Honda Splender வாகனத்தையும், அதனருகில் அனாதையாக நின்றிருந்த Bajaj Pulser வாகனத்தையும் கைப்பற்றி எடுத்துச் சென்றுவிட்டனர்.
இந்நிகழ்வு காரணமாக, சித்தன் தெரு இன்று அதிகாலையில் பரபரப்புடன் காணப்பட்டது.
இன்று நள்ளிரவில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த ரியாத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழமை போல தன் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளார். அந்நேரத்தில் அவரது வாகனத்திலிருந்து பெட்ரோலைத் திருடும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பெட்ரோல் வாசனை அதிகளவில் உணரப்பட்டதையடுத்து கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது, தனது வாகனத்திலிருந்து பெட்ரோல் திருடப்படுவதையும், அருகிலுள்ள சந்தில் பதின்பருவத்து இளைஞர்கள் சிலர் காத்திருந்ததையும் கண்ணுற்ற அவர், தனது வாகனத்தைப் பாதுகாத்துவிட்டு ஒளிந்திருந்த இளைஞர்களைத் தேடுவதற்குள் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
|