தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது குறித்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகரிலுள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வூட்ட சிறப்புக் கூட்டம், 27.06.2017. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்மா உணவக வளாகத்தில் நடத்தப்பட்டது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் கூட்ட அறிமுகவுரையாற்றினார். தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை என்ன என்பது குறித்த அரசு அறிவிப்புகளை அவர் கடை உரிமையாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.
நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
40 மைக்ரான் அளவுக்குக் குறைவான ப்ளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளபோதிலும், நகரின் பெரும்பாலான கடைகளில் அவை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது தொடர்வதாகக் கூறிய அவர், இனி வருங்காலங்களில் திடீர் சோதனையில் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பது கண்டறியப்பட்டால், முதற்கட்டமாக அபராத விதிப்பும், இரண்டாவது முறையும் கண்டறியப்பட்டால் அக்கடை உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப் பதிவும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். “வணிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போல வாடிக்கையாளர்களுக்கும் விதிக்கலாமே...? அவர்கள் கேட்பதால்தானே நாங்கள் கொடுக்க நேரிடுகிறது?” என்று கடை உரிமையாளர்கள் சிலர் கேட்டனர். “வாடிக்கையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை வழங்கினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது போல, அவர்கள் குப்பைகளில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது... இதுகுறித்து பொதுமக்களுக்கு பகுதி வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.” என்றார் அவர்.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
|