காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, பொதுமக்கள் தம் இல்லங்களில் சேரும் குப்பைகளைப் பிரித்தளிக்க செயல்திட்டம் வகுத்து, அதுகுறித்து மக்களுக்கு விளக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று 09.30 மணியளவில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியையொட்டியுள்ள மன்பஉல் பரக்காத் சங்கத்தில், பொதுமக்களைத் திரட்டி விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக நகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், வடிவமைத்துள்ள செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
வீடுகளில் சேரும் குப்பைகளைப் பிரித்தளிப்பதற்காக நகராட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு அறிவுரைகளையும் விளக்கினார்.
வாரம் ஒரு நாள் மட்டுமே ப்ளாஸ்டிக் கழிவுகள் துப்புரவுப் பணியாளர்களால் பெறப்படும் என்றும், அதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது குப்பைகளை – மக்கும் குப்பை, மக்காத குப்பை, ப்ளாஸ்டிக் கழிவுகள் என மூன்றாகப் பிரித்து, துப்புரவுப் பணியாளர்களிடம் அந்தந்த நேரங்களில் வழங்கிட வேண்டும் என்றும் அவர் அப்போது கூறினார்.
தொடர்ந்து பேசிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகராட்சியின் இந்தத் திட்டங்களின் படியே இனி துப்புரவுப் பணியாளர்களால் குப்பைகள் சேகரிக்கப்படும் என்றும், விதிகளை மீறி யாரும் செயல்பட்டால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
அனைத்தையும் கேட்ட பொதுமக்கள், “எங்கள் ஊர் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பளிப்போம்!” என்று உறுதி கூறினர். அனைவருக்கும் குப்பைகளைப் பிரித்தளிக்க வழிகாட்டும் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
பின்னர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், துப்புரவுப் பணியாளர்களும் – சித்தன் தெரு உள்ளிட்ட அப்பகுதி சுற்றுவட்டாரங்களில் வீடு வீடாகச் சென்று, குப்பைகளைப் பிரித்து வழங்குவதற்கான அறிவுரைகளை உள்ளடக்கிய பிரசுரங்களை வினியோகித்து, ஒத்துழைப்பு கோரினர். அனைவரும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர். |