காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளில், தமிழக அரசின் மீன்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகில் சிங்கத்துறை, கொம்புத்துறை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மீன்வளத்துறையின் மூலம் ரூ.6.50 கோடி செலவில்; மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், 29.6.2017. அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காயல்பட்டினம், சிங்கிதுறையில் ரூ.4.50 கோடி செலவில் 2 மீன் ஏலக்கூடங்கள், ஒரு வலை பின்னும் கூடம், நவீன கழிப்பறைகள், மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொம்புத்துறையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி இறங்கு தளம் (Fish Landing Centre), வலை பின்னும் கூடம், தார் சாலை வசதி, ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து மீன்வளத்துறை அலுவலரிடம் கேட்டறிந்தார்.
நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து, அப்பகுதியிலுள்ள மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சாயர்புரம், அருகில் உள்ள ஜக்கம்மாள்புரத்தில் 25 பேர் கொண்ட குழுவினர் தமிழக அரசின் மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்பட்ட மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்று ஏற்படுத்தியுள்ள அலங்கார மீன் வளர்ப்பு மையத்தை அவர் நேரில் பார்வையிட்டு, அலங்கார மீன்வளர்ப்பு குறித்தும், அவற்றை சந்தைப்படுத்துதல் குறித்தும் கேட்டறிந்து, அலங்கார மீன்வளர்ப்புப் பண்ணையை மேம்படுத்துவதற்கான தகுந்த அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும் அலங்கார மீன்வளர்ப்புத் தொழிலை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தி, தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு தொழில் முனைவோர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, மீன்வளத்துறை இணை இயக்குநர் சீனா செல்வி, உதவி இயக்குநர்கள் கணேஷ் நேரு, பால சரஸ்வதி, உதவி செயற்பொறியாளர் சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|