கடந்த நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தாயகமான காயல்பட்டினம் வந்திருந்த – வெளிநாடு வாழ் காயலர்களுக்கு, தம் பணிகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, துளிர் அறக்கட்டளை சார்பில் சிறப்புக் கூட்டம் 28.06.2017. புதன்கிழமையன்று 19.00 மணியளவில், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி காணொளிக் கூடத்தில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்களான அப்துல் வதூத் தலைமை தாங்க, வட்டம் ஹஸன் மரைக்கார் முன்னிலை வகித்தார்.
துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அதன் தலைவர் வழக்குரைஞர் அஹ்மத் அனைவரையும் வரவேற்றதோடு, பள்ளியின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள், பள்ளி குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் ஆகிய தகவல்களை உள்ளடக்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, கவிஞர் முஸ்தாக் அஹ்மத் (குவைத்), ‘கவிமகன்’ காதர் (பஹ்ரைன்), காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், கத்தர் காயல் நல மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், நகரப் பிரமுகர் எஸ்.ஏ.ஜமால் என்ற ஜமால் மாமா, நுஸ்கீ, ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
காயல்பட்டினம் நகர மாணவர்களுக்கும், அவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் – பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும், நடத்தவும் பயிற்றுவிக்கும் வகையில் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது குறித்து முனைவர் எஸ்.எம்.ஹமீத் ஸுலைமான் விளக்கிப் பேசினார்.
அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான அனுசரணையை வழங்க ஆயத்தமாக உள்ளதாக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இதன்போது அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய – ஏ.எல்.முஹம்மத் நிஜார் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில், உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், அங்கத்தினர் உட்பட வெளிநாடு வாழ் காயலர்களும், நகரப் பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் – ‘க்ளிக் ஆன்’ தனியார் நிறுவன அனுசரணையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
|