தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் நிறுத்தப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சி ரயில் மூன்றாம் நாள் நிறைவில் பெருந்திரளான மாணவ-மாணவியர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், அறிவியல் தொழில் நுட்பத் துறை, உயிர் தொழில் நுட்பத்துறை, விக்ரம் சாராபாய் அறிவியல் மையம், இந்திய வனவியல் நிறுவனம், ரயில்வே நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே அறிவியல் கண்காட்சி, தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர், கொடைக்கானல் ரோடு, விருதுநகர் ஆகிய ஊர்களின் ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட பின், ஆறுமுகனேரிக்கு வந்திருந்தது.
ஆறுமுகனேரியில் 28.06.2017. புதன்கிழமை துவக்கப்பட்ட இக்கண்காட்சியை, திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 40 பள்ளி - கல்லூரிகளின் 12 ஆயிரம் மாணவ-மாணவியரும், பொதுமக்களும் பார்வையிட்டனர். முதல் நாளன்று காலையில் வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பாட்டாளர்கள் திணறினர்.
29.06.2017. வியாழக்கிழமையன்று - இரண்டாம் நாளும் இதே நிலை நீடித்தது. திருநெல்வேலி -, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 146 பள்ளி கல்லூரிளைச் சேர்ந்த 18 ஆயிரம் மாணவ-மாணவியர் கண்காட்சியைக் கண்டுகளித்தனர். மேலும் ஆறுமுகனேரி, ஆத்தூர், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 4 ஆயிரம் பேரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி ரயில் நிலையத்தின் மூன்றாம் நடைமேடையில், அறிவியல் ரயில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததால், முதல் இரு நடைமேடைகளைக் கடந்து மாணவ-மாணவியர் சென்று பார்வையிட்டனர். பள்ளிக் குழந்தைகளும் பார்வையிட வந்ததால் அவர்களைக் கண்காட்சி ரயில் அருகில் அழைத்துச் செல்வது ஆசிரியர்களுக்கு அவதியாக இருந்தது.
மேலும், ஆறுமுகனேரி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் மெதுவாக வர வேண்டும் ஏன பணிக்கப்பட்டிருந்தும், வியாழக்கிழமையன்று 16.00 மணியளவில் திருச்செந்தூருக்குச் சென்ற பாலக்காடு - பழனி பயணிகள் ரயில் மிக வேகமாக வந்ததைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கிட ரயில்வே துறையினர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
பார்வையாளர்கள் அதிகமாக வந்த நிலையில், 16.00 மணிக்கே அவர்களை நிறுத்தியதால், பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றமடைவர் என்று கூறி ரயில்வே காவல்துறையிடம் பத்திரிகையாளர்கள் அறிவுறுத்தியதன் பேரில் 17.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கபட்டனர். இருப்பினும் 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் நேரமின்மை காரணமாக மறுநாள் வெள்ளிக்கிழமை வந்து பார்வையிட அறிவுறுத்தப்பட்டனர். அதிகளவில் பார்வையாளர்கள் கலந்துகொண்டதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
ஆங்கிலத்தில் விளக்கம் கூறும் இளைஞர்களே அதிகம் இருந்த நிலையில், மாணவ-மாணவியர் உள்ளிட்ட பெரும்பாலோர், காட்சிகளைப் புரிந்து கொள்வதில் அவதி இருந்தது. மேலும் ஆங்கிலம், இந்தியில் விளக்கக் குறிப்பு இருந்தது. அந்தந்த மாநிலத்திற்குள் நுழையும் நிலையில் – அதற்கேற்ப மொழிமாற்றம் செய்யப்பட்ட விளக்கக் குறிப்புகள் இருந்திருந்தால் தமக்குப் பெரும் பயனாக இருந்திருக்கும் என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
தகவல்:
V.குமார்
|