பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும், காயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்துகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குநரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் அனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், காயல்பட்டினத்தை புறக்கணிப்பது தொடர்பாக, கடந்த ஓர் ஆண்டாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
துவக்கமாக, காயல்பட்டினம் வழியை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பது குறித்து - போக்குவரத்துத் துறை அரசு செயலர், மாவட்ட ஆட்சியர், அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் - புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
அதே நேரத்தில், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது.
புகார்களைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வழியாக அனைத்துப் பேருந்துகளும் செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு பதில்கள் வந்தன.
அதை உறுதி செய்யும் முயற்சியாக, இவ்வாண்டு ஜனவரி மாதத் துவக்கத்தில் - 24 மணி நேரம், பேருந்துகள் வருகை கண்காணிப்பு (24 HOURS CITIZENS' BUS MONITORING) – “நடப்பது என்ன?” தன்னார்வலர்கள் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
அதில், முன்பை விட பல பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக வந்து செல்வது கண்டறியப்பட்டபோதிலும், ஏறத்தாழ 40 சதவீதம் பேருந்துகள் காயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணிப்பதும் கண்டறியபப்ட்டது. இந்த விபரங்கள் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக - போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதியும் அளித்தனர்.
உறுதியளித்த படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, நான்கு மாத இடைவெளிக்கு பிறகு - இரண்டாம் முறையாக மீண்டும் - 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு, “நடப்பது என்ன?” தன்னார்வக் குழுமத்தால் மே மாத இறுதி வாரத்தில் நடத்தப்பட்டது. அதில், ஜனவரி கண்காணிப்பின்போது வந்து சென்ற பேருந்துகளின் எண்ணிக்கையை விட மிகக் குறைவான பேருந்துகளே வந்து செல்வது கண்டறியப்பட்டது.
இந்தப் புதிய புள்ளி விபரங்களுடனான விரிவான மனுக்களை, அரசுப் போக்குவரத்து கழகங்களின் - மதுரை, திருநெல்வேலி, கோவை, கும்பகோணம் ஆகிய மண்டலங்களின் அனைத்து நிர்வாக இயக்குநர்களையும் நேரில் சந்தித்து வழங்கிட, “நடப்பது என்ன?” குழுமத்தால் முடிவு செய்யப்பட்டு, அதன்படி, 28.06.2017. புதன்கிழமையன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் நேரில் மனு வழங்கப்பட்டது.
அத்துடன், இதுவரை வழங்கப்பட்ட மனுக்கள் குறித்தும் அக்கழகத்தின் பொது மேலாளரிடம் விரிவாக விபரங்கள் எடுத்துக் கூறப்பட்டன. மதுரை மண்டலத்திலிருந்து குறைந்தது 82 - பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டும் என்றும், ஜனவரி மாத கண்காணிப்பில் 34 பேருந்துகளும், மே மாத கண்காணிப்பில் 17 பேருந்துகளும் (20 சதவீதம்), காயல்பட்டினம் வழியாக சென்றன என்ற விபரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
தான் இப்பொறுப்பிற்குப் புதிதாக வந்துள்ளதாகவும், தான் பொறுப்பிற்கு வந்த பிறகு இது குறித்த புகார் தன் கவனத்திற்கு இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்த பொது மேலாளர், இது தொடர்பாக, அடுத்த நிலை அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதன்போது உறுதி அளித்தார்.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, ஒவ்வொரு பேருந்திலும் "வழி: காயல்பட்டினம்" பலகை வைப்பது / ஸ்டிக்கர் ஓட்டுவது, மதுரை உட்பட முக்கிய பேருந்து நிலையங்களில், “திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக செல்லும்” என்ற தகவல் பலகை வைப்பது, காயல்பட்டினத்திற்கு என தனி ஸ்டேஜ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 28, 2017; 10:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|