நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மணப்பாடு கடற்கரைக்குக் குடும்பத்துடன் சிற்றுலா சென்ற உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் கடலில் குளித்தபோது, மூழ்கி மரணமடைந்துள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கோமான் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரிஃபாய்தீன். சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் வருஷை அஹ்மத் (18 வயது) செய்துங்கநல்லூரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்; இரண்டாவது மகன் அஹ்மத் ஸாலிஹ் (வயது 15) காயல்பட்டினத்தில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சென்னையிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் ரிஃபாய்தீன் குடும்பத்தினர் அனைவரும் 11.00 மணியளவில் மணப்பாடு கடற்கரைக்குச் சிற்றுலா சென்றுள்ளனர். அங்கு, கடலில் குளிக்கச் சென்ற வருஷை அஹ்மத், அஹ்மத் ஸாலிஹ் ஆகிய இரு சகோதரர்களும் அலையில் சிக்கி, கடலில் மூழ்கி இறந்துவிட்டனர்.
அவர்களது உடல்கள் – திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், 20.30 மணியளவில், காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளி மையவாடியில் அடுத்தடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டன.
நோன்புப் பெருநாளன்று அனைவரும் மகிழ்ச்சியிலிருந்த நேரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு நகர் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.
|