நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று காலை 07.30 மணியளவில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. கிஸார் தொழுகையை வழிநடத்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் உடன்குடி அபூதாஹிர் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகரப் பிரமுகர்கள், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஏழைகள் துயர்துடைக்கும் நலநிதிக்காக, ஆண்கள் பகுதியிலிருந்து 44 ஆயிரதது 120 ரூபாய்; பெண்கள் பகுதியிலிருந்து 51 ஆயிரத்து 680 ரூபாய் என மொத்தம் 95 ஆயிரத்து 800 ரூபாய் தொகையும், 4 கிராம் தங்க நாணயம் ஒன்றும் நன்கொடையாகப் பெறப்பட்டன.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு முன்னதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட 10 ஆயிரம் ரூபாய், காயல்பட்டினம் கிளையால் சேகரிக்கப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 800 ரூபாய் தொகையைக் கொண்டு, 465 ஏழைக் குடும்பத்தினருக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
‘தேக்’ முஜீப்
|