ரமழான் மாதம், இஸ்லாமிய நிகழ்வுகள் குறித்த நிழற்படப் பதிவுகளை தேடல் இணையதளங்களில் அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, “டீக்கடை முகநூல் குழுமம்” எனும் பெயரிலான குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் முதற்பரிசை வென்றுள்ளார். விரிவான விபரம்:-
‘Spirit of Ramadhan’ எனும் தலைப்பில், ரமழான் நிகழ்வுகளை விவரிக்கும் நிழற்படப் போட்டி, 12.06.2017. முதல் 30.06.2017. வரை - “டீக்கடை முகநூல் குழுமம்” எனும் பெயரிலான குழுமம் சார்பில், Ramadhan Photography எனும் பெயரில் – முகநூல் மூலமாக நடத்தப்பட்டது.
ரமழான் நிகழ்வுகளைக் கலைநயத்துடன் பதிவு செய்தல்,
சொந்தமாகப் படமெடுத்தல்,
போட்டி துவக்க நாள் முதல் நிறைவு நாள் வரை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 படங்களை அனுப்பல்,
கைபேசி, கேமரா என எந்தக் கருவிகளைக் கொண்டும் படமெடுத்தல்,
பதிவு செய்யப்பட்ட படம் எங்கு – எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரத்தை அனுப்பல்
ஆகிய அம்சங்களை விதிமுறைகளாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பெறப்பட்ட ஏராளமான படங்களுள், பரிசுக்குரிய முதல் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் பணிபுரியும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் அனுப்பிய படம் முதற்பரிசாக 3 ஆயிரம் ரூபாயை வென்றுள்ளது.
வஹீதா அஸ்ஃபக் என்பவரது படம் இரண்டாமிடத்தையும், எஸ்.ஐ.சுல்தான் என்பவரது படம் மூன்றாமிடத்தையும் பெற்றன.
|