“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் செல்ல மறுத்த ஓட்டுநர் / நடத்துநர் மீது – துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ராமநாதபுரத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 15ஆம் நாள் மாலை, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் நோக்கி செல்ல வேண்டிய பேருந்தில் - காயல்பட்டினத்தைச் சார்ந்த இருவர் ஏறி, காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட் கேட்டுள்ளனர். "இப்பேருந்து காயல்பட்டினம் வழியாகச் செல்லாது! ஆறுமுகனேரியில் இறங்குங்கள்!!" என அப்போது நடத்துநர் கூறியிருக்கிறார்.
அவர்கள் பலமுறை வேண்டுகோள் வைத்த பின்னரும் - அப்பயணியரை ஆறுமுகனேரியில் நள்ளிரவில் அப்பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். கடும் அவதிகளுக்கிடையில் வேறொரு பேருந்து மூலம் அவர்கள் காயல்பட்டினம் வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பாக – அப்பேருந்தின் நடத்துநரது படம், பேருந்து எண், பயணச் சீட்டு ஆகியவற்றுடன் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு அப்பயணியருள் ஒருவர் வழங்க, அவை – போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, 19.07.2017. வியாழக்கிழமையன்று, “நடப்பது என்ன?” குழுமத்தைத் தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல அதிகாரி, தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் / நடத்துநர் நேரடியாக அழைக்கப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
காயல்பட்டினம் வழியில் செல்லவேண்டிய பேருந்துகள் காயல்பட்டினத்தைப் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர் / நடத்துநர் ஆகியோர் கவனத்திற்கு மீண்டும் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 20, 2017; 2:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|