காயல்பட்டினம் அஞ்சல் நிலையம், முதன்மைச் சாலையில் உள்ள வாடகைக் கட்டிடமொன்றில் பல்லாண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது அக்கட்டிடத்திலிருந்து இடம் மாறவுள்ளதையடுத்து, பொதுமக்கள் வசதியைக் கருத்திற்கொண்டு, அஞ்சல் நிலையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க அரசை வலியுறுத்தி, நகர் முழுக்க “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுமக்களிடம் கைச்சான்றுளைச் சேகரித்து வருகிறது.
அந்த வரிசையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தன்னார்வலர்கள் கடற்கரை நுழைவாயிலில் நின்றவாறு பொதுமக்களிடம் கைச்சான்றுகளைச் சேகரித்தனர். நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் – இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்தவர்களாக, படிவங்களில் ஆதரவுக் கைச்சான்றிட்டனர்.
|