காயல்பட்டினம் நகரின் சாலைகளைத் தரமாகப் புனரமைக்க, நகராட்சியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நிலுவையில் இருந்த வழக்கு [WP MD 13783/2015] - தற்போது நிறைவுக்கு வந்துள்ளதை அடுத்து, நகரில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் - புனரமைக்க, நகராட்சியினை வலியுறுத்தி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று நகராட்சியின் பொறியாளர் திரு பாலமுருகனிடம் மனு வழங்கப்பட்டது.
அம்மனுவில் கீழ்க்காணும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது:
(1) பேவர் பிளாக் கற்கள் சாலைகளை முற்றிலும் தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம். இந்த வகை சாலைகளுக்கு முறையான SCHEDULE OF RATES இல்லாததால், முறைக்கேடுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது; மேலும் - PAVER BLOCK சாலைகள், வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ள சாலைகளுக்கே பொருத்தம்.
காயல்பட்டினம் போன்ற நகரங்களில் - கல்லூரி, பள்ளிக்கூடங்கள் வாகனங்கள் உட்பட அனைத்து வகை வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம், மேலும் மழைக்காலங்களில் இதனால் ஆபத்து அதிகம் ஏற்படவாய்ப்புள்ளது.
(2) மக்கள் பிரதிநிதிகள் கொண்ட காயல்பட்டினம் நகராட்சி ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானப்படி - சாலைகளுக்கு இரண்டு ஆண்டுகள் குறைந்தது - ஒப்பந்ததாரர் உத்தரவாதம் தரவேண்டும் என்ற நிபந்தனையை டெண்டர் விடப்படும் போது - விதிமுறைகளில் - இணைக்கவும்.
(3) காயல்பட்டினம் நகரில் இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகளுக்கு மீண்டும் சாலைகளை தோண்ட அவசியம் இல்லாத தெருக்களுக்கு முன்னுரிமை அளித்து - சாலை பணிகளுக்கு டெண்டர் விடவும். மேலும் எஞ்சியுள்ள இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடித்திட ஆவனம் செய்யவும்.
(4) காயல்பட்டினம் நகரில் கடந்த காலங்களில் (நெய்னார் தெரு, அப்பாபள்ளி தெரு, பாக்கர் காலனி உட்பட) தரமற்ற சாலைகளை போட்டுள்ள தளவாணிமுத்து, தங்கப்பூ ஆகியோரை பிளாக் லிஸ்ட் செய்து - சாலைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளில் அவர்களை பங்கேற்க அனுமதிக்கவேண்டாம். லஞ்சம் கொடுக்காமல், தரமான பணிகளை செய்யக்கூடிய ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கும் வகையில், வெளிப்படையான முறையில் - முறைக்கேடுகளுக்கு வழியில்லாமல் eTENDER வகையில் மட்டும் டெண்டர் வெளியிடவும்
(5) சாலைகளில் நீர் தேங்காதவண்ணம் - சாலைகளை வடிவமைக்கவும்
(6) தோண்டி போடவேண்டிய இடங்களில், பழைய சாலைகளை தோண்டி - புதிய சாலைகளை அமைக்கவும்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 7, 2017; 1:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|