காயல்பட்டினம் நகராட்சி முறைக்கேடுகள்: முறைமன்றம் உத்தரவிட்ட நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு! பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை!!
காயல்பட்டினம் நகராட்சியில் 2011 - 2016 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் நடந்த பல்வேறு முறைக்கேடுகள் குறித்து முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்கள் முறைமன்றத்தில் (TAMIL NADU LOCAL BODIES OMBUDSMAN) - 2015 ஆம் ஆண்டு இறுதியில் - வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் டிசம்பர் 2016 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஆணைகள் பிறப்பித்த முறைமன்றம், உயர் அதிகாரிகளின் ஊக்கத்தோடு பல்வேறு முறைக்கேடுகள் நகராட்சியில் நடந்ததை உறுதி செய்ததது. இது சம்பந்தமாக விரிவான விசாரணை மேற்கொள்ள நேர்மையான அதிகாரிகளை கொண்ட குழுவை, நகராட்சி நிர்வாக ஆணையர் நியமனம் செய்ய வேண்டும் எனவும் முறைமன்ற நடுவர் சோ.அய்யர் (IAS) (ஓய்வு) உத்தரவிட்டிருந்தார் [Order No.186/2016].
அது போல - காயல்பட்டினம் நகராட்சி மூலம் விடப்பட்ட வேறு சில டெண்டர்களிலும் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளது குறித்து காயல்பட்டினத்தை சார்ந்த எம்.எஸ்.முஹம்மது சாலிஹு என்ற தனியார் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் - உள்ளாட்சிமன்றங்களின் முறைமன்றத்தில் புகார் பதிவு செய்திருந்தார்.
அதில் - இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தரவுகள் பிறப்பித்த முறைமன்றம், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் - முறையாக விசாரிக்காமல் கோப்பினை மூடியுள்ளார் என கண்டித்து, முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழக்கில் அமைக்கப்பட்ட குழுவே - இப்புகாரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. [Order No.29/2017].
முறைமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்கள் ஆகியும், இது வரை "நேர்மையான அதிகாரிகள் குழு" அமைக்கப்பட்ட தகவல் இல்லை; இது சம்பந்தமான மனுவுக்கும், தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகளுக்கும் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் எவ்வித பதிலும் கொடுக்காத நிலையில் - முறைமன்றத்தில் புகார் பதிவு செய்திருந்த தனியார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 8) இவ்வழக்கு நீதிபதி துரைசாமி முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் எஸ்.திவாகர் - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சார்பாக நோடீஸ் பெற்று, பதில் தாக்கல் செய்ய இரு வாரம் கோரினார்.
தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்களின் முறைமன்றத்திற்கு தனியாக நோடீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross