காயல்பட்டினம் நகராட்சிக்கு ஏற்கனவே இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களோடு, கூடுதலாக 40 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இதனால், துப்புரவுப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 123 ஆகிறது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மேலும் 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்கிறது காயல்பட்டினம் நகராட்சி! மொத்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்கிறது!! ஆகஸ்ட் 18 அன்று டெண்டர் திறப்பு!!!
காயல்பட்டினம் நகராட்சியில் 33 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. 25 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் - காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது பணி புரிகிறார்கள். இவர்களுக்கு என ஆண்டொன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேலும் சம்பளம் வழங்கப்படுகிறது.
பணியாளர்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நகர்மன்றம் செயல்பாட்டில் இருக்கும்போது - 50 துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, தென்திருப்பேரையை சார்ந்த KR CONSTRUCTIONS என்ற நிறுவனம் மூலம் பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் - நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள். இந்த பணிக்கான செலவீனம் - ஆண்டொன்றுக்கு சுமார் 58 லட்சம் ஆகும்.
இதற்கிடையே, இந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆறு மாதங்களே நிறைவுற்றுள்ள நிலையில், ஆண்டொன்றுக்கு கூடுதலாக 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய நகராட்சி முடிவு செய்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க - ஆகஸ்ட் 18 இறுதி தினம் ஆகும்.
விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் - நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயரவுள்ளது. மேலும் - இவர்களுக்கான ஆண்டு சம்பளம் மட்டும் - 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாயாக உயரவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 10, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|