தமிழ்நாடு அரசின் அனைத்து மண்டலப் பேருந்துகளும் காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்காதிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்பது சம்பந்தமாக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் - காயல்பட்டினம் வழியில் அரசு பேருந்துகளை இயக்கும் நான்கு கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களை, நடப்பது என்ன? குழும அங்கத்தினர் - திருநெல்வேலி, மதுரை, கும்பக்கோணம் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு நேரடியாக சென்று - தொடரும் இப்பிரச்சனை குறித்து விளக்கி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து - இன்று, திருநெல்வேலி கழகத்தின் மேலாணை இயக்குனர் திரு மோனி - நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதில் -
"... காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிக்கின்றன என்ற தங்களின் புகார்கள் குறித்து - நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மேலாண்மை இயக்குனர் படை மூலமாக அடிக்கடி நானும் - விசாரித்து வருகிறேன். குறைப்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். சகோதர கழக பேருந்துகளும் (மதுரை, கும்பக்கோணம், கோவை) - காயல்பட்டினம் வழியை புறக்கணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன். தவறுகள் தொடர்ந்து நடக்குமேயானால், அவற்றை நிவர்த்தி செய்ய - அது சம்பந்தமான புகார்களை தெரிவிக்கவும்.,,"
என தெரிவித்துள்ளார்.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, தீர்வுகள் நிரந்தரமாக வேண்டும் என்ற வேண்டுகோளும் - மேலாண்மை இயக்குனர் அவர்களிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 8, 2017; 3:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|