காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் அடங்கியிருக்கும் மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் கந்தூரி நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு கந்தூரியை முன்னிட்டு, நகரளவிலான கிராஅத் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக நகரின் அனைத்து மத்ரஸாக்கள், அரபிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, 06.08.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணி முதல் 12.00 மணி வரை, பெரிய நெசவுத் தெரு ஹாமீதிய்யா பெண்கள் தைக்கா வளாகத்தில் – நகரளவிலான கிராஅத் போட்டி நடத்தப்பட்டது. இதில் நகரின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 27 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நெசவு ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, போட்டியின் நடுவர்களாக காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.எச்.தாவூத் ஆகியோர் கடமையாற்றினர்.
போட்டியின் நிறைவில், ஜாவியா அரபிக் கல்லூரி மாணவர் எஸ்.எம்.எச்.முஹம்மத் ஃபரீதுத்தீன் முதற்பரிசைப் பெற்றார். அவருக்கு 1,500 ரூபாய் பணப்பரிசு அறிவிக்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு 1,000 ரூபாயும், மூன்றாமிடம் பெற்ற மாணவருக்கு 750 ரூபாயும், அடுத்து வந்த 5 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசாக தலா 300 ரூபாயும் என மொத்தம் 4 ஆயிரத் 750 ரூபாய் பணப்பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இப்பரிசுகள், கந்தூரி விழா நிறைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கிராஅத் போட்டிக்கான ஏற்பாடுகளை, பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த தாரிக் ஒருங்கிணைப்பில், நெசவு ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.
இனி, ஆண்டுதோறும் நகரளவிலான திருக்குர்ஆன் கிராஅத், மனனம் (ஹிஃப்ழ்), அதான் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போட்டியின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது.
|