வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாளன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இணைந்து நடத்தும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க பொதுநல அமைப்புகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அக்டோபர் 3 அன்று நடைபெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்துக்கொள்ள பொது நல அமைப்புகளுக்கு, நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் - எதிர்வரும் அக்டோபர் 3 அன்று, இறைவன் நாடினால், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழும ஒருங்கிணைப்பில் - இரத்த தானம் முகாம் - நடத்தவுள்ளார்கள்.
சுமார் 50 கிலோவிற்கு மேல் எடையுள்ள, 18 வயதை தாண்டி 65 வயதிற்குள் உள்ள, ஆண் - பெண் அனைவரும் இரத்த தானம் செய்யலாம் என்பதை தாங்கள் அறிவீர்கள். நாம் செய்யும் இரத்த தானம் மூலம் பலரின் உயிர் காப்பாற்றப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு இந்தியா அரசாங்கம் வெளியிட்ட தேசிய இரத்த தேவை கொள்கையின்படி (NATIONAL BLOOD POLICY), ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உறவினர் மூலம் இரத்தம் கேட்கும் முறை படிப்படியாக நிறுத்தப்பட்டு (REPLACEMENT DONORS), முன்னரே - இரத்த தானம் முகாம்கள் போன்ற வழிகளிலேயே இரத்தம் சேகரிக்கப்பட்டு - நாட்டின் இரத்தம் தேவை பூர்த்திசெய்யப்படவேண்டும்.
வளர்ந்த நாடுகளில் 3 சதவீதத்திற்கும் மேலான மக்கள், இரத்த தானம் செய்பவர்களாக இருப்பது போல - நம் நகரின் மக்கள் தொகையில் குறைந்தது 5 சதவீத மக்கள், இரத்த தானம் செய்வதை வழமையாக்கி கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கில் - நடப்பது என்ன? குழுமம், அரசு இரத்த தான வங்கிகளோடு இணைந்து, இந்த இரத்த தான முகாமை நடத்துகிறது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே - இம்முகாமில் - தங்கள் அமைப்பு / நிறுவனம் அங்கத்தினர், பெரும் அளவில் கலந்துக்கொண்டு - இரத்த தானம் செய்திட அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அழைப்பிதழில் வாசகம் அமைந்துள்ளது. இவ்வழைப்பிதழ், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC), கோமான் யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப், இ.யூ.முஸ்லிம் லீக், தமுமுக, ததஜ, அருணாச்சலபுரம் திருவள்ளுவர் மன்றம் உட்பட நகரின் பொதுநல அமைப்புகளுக்கும், சமுதாய அரசியலமைப்புகளுக்கும் நேரில் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 23, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|