சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியிலும்,, இரண்டாவது நிகழ்ச்சி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலும். நடைபெற்று முடிந்துள்ளது. முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் இன்று காலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமூக ஊடகங்கள் (SOCIAL MEDIA) ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி - இறைவன் நாடினால், காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது. நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
இத்தொடரின் முதல் நிகழ்ச்சி - செப்டம்பர் 9, 2017 அன்று காயல்பட்டினம் சுபைதா மேனிலைப்பள்ளியில் நடந்தது. இரண்டாவது நிகழ்ச்சி, செப்டம்பர் 16, 2017 அன்று சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் நடந்தது.
இத்தொடரின் மூன்றாவது நிகழ்ச்சி, முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (செப்டம்பர் 23, 2017) காலை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் - முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் 6 வது வகுப்பு முதல் 12 வகுப்பு சார்ந்த ஏறத்தாழ 100 மாணவியரும், நூற்றுக்கும் மேற்பட்ட முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி திருமதி I.ஆபிதா சேக் B.Sc., B.Ed. - முன்னிலை வகித்து, நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். மாணவி செல்வி சாகிபு நாச்சி - கிராஅத் ஓதி, நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் செல்வி மரியம் பாத்திமா M.Com, B.Ed வரவேற்புரை நிகழ்த்தினார்.
துவக்கமாக, வழக்கறிஞர் செல்வி M.சுகன்யா B.A.,B.L. மகளிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் திருமதி M.ரவிமதி M.A. (English Literature) - பாலியல் குற்றங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.
அடுத்து, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவலர் திருமதி சந்திரிகா - மாணவியர் மத்தியில் உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி C.சாந்தி, உரையாற்றினார்.
மொஹிதீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் M.A.,M.Phil.,B.Ed - தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளின் நோக்கங்கள் குறித்து முன்னாள் நகர்மன்றத்தலைவர் I.ஆபிதா சேக் B.Sc., B.Ed. இறுதியாக, உரை நிகழ்த்தினார்.
நடப்பது என்ன? பெண்கள் குழும நிர்வாகிகளில் ஒருவரான திருமதி தஸ்லீமா அஜீஸ் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் I.ஆபிதா சேக் தலைமையில், நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் - திருமதி மொபா மாலிக், திருமதி நிலோபர் சாமு, திருமதி தஸ்லீமா அஜீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 23, 2017; 12:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|