காயல்பட்டினத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சொத்து வரி (Property Tax) மறு ஆய்வு குறித்து, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் தற்போது - நகராட்சி சார்பாக - பல்வேறு பகுதிகளில், வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பொது மக்களிடம் ஐயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து - இது குறித்து விளக்கம் கேட்க - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களுடனான சந்திப்பு 20.09.2017. அன்று நடைபெற்றது.
அந்த சந்திப்பின் போது, இது வழமையான ஆய்வு என்றும், கட்டிடம் அனுமதியின் போது வழங்கப்பட்ட அளவை விட, கூடுதலாக கட்டுமானங்கள் நடந்து, அவை - சொத்து வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வுகள் செய்யப்படுவதாக ஆணையர் தெரிவித்தார்.
இவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பொது மக்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்றும், ஆட்டோ பிரச்சாரம் மக்களிடம் சென்றடையவில்லை என்றும் ஆணையரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
எந்த அடிப்படையில் அளவுகள் சரிபார்க்கப்படுகிறது, எந்த அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது போன்ற கேள்விகள் - ஆணையர் முன் வைக்கப்பட்டது. இது குறித்து விரிவான விளக்கங்களை விரைவில் தருவதாக - ஆணையர் உறுதியளித்துள்ளார்.
மேலும் - ஆய்வுக்கு செல்பவர்கள், தங்கள் அடையாள அட்டையை கொண்டு செல்ல வலியுறுத்தவும், ஆணையரிடம் கோரப்பட்டது.
காயல்பட்டினத்தில் அதிகமான வீடுகளில் கோஷா பெண்கள் இருப்பதால், ஆய்வுக்கு செல்பவர்களும் பெண்களாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஆணையரிடம் வைக்கப்பட்டது. அதனை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.
மேலும் - வீடுகளுக்கு வெளியில் இருந்து அளவிடவே, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வீடுகளுக்குள் வர தேவையில்லை என்றும் மேலும் ஆணையர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் 13வது வார்டு உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.எம்.சம்சுதீன் உடனிருந்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 20, 2017; 6:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|