தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, குளக்கரைகளைப் பலப்படுத்த பொதுப்பணித் துறைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (18.9.2017) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி அதன் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் ஆறு குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது எஞ்சியுள்ள குளங்களும் நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, குளங்களுக்கு நீர் வரும் மடைகளை சீர் படுத்துவதோடு, குளங்களிலிருந்து வெளியேறும் நீர் செல்வதற்கான மடைகளையும் சரிசெய்திட வேண்டும். மேலும், மதகுகள் பலமாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தீவிரமாக மழை பெய்யும் போது குளங்களின் கரைகளை கண்காணித்து மடைப் பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகளை பாதுகாப்பிற்காக இருப்பில் வைத்திருக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் அருகில் உள்ள குளங்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தவிட்டார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அல்பிஜாண்வர்க்கீஸ்,இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.தீபக்ஜேக்கப்,இ.ஆ.ப., மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வே.பிச்சை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மா.இராஜையா, கோட்டாட்சியர்கள் திருமதி.அனிதா, திரு.கணேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.ஜவஹர் திரு.முருகன், திரு.நட்டார், உதவி பொறியாளர் திரு.பாஸ்டின்வினோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|