பொதுமக்களை வாசிப்பின்பால் ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகமும், பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, வரும் அக்டோபர் மாதம் 02 முதல் 11ஆம் நாள் வரை தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளன. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும், விலை மதிக்கவியலாத – பல்வேறு தலைப்புகளிலான அரிய புத்தகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் எளிதில் பெற்றிட வழிசெய்யும் நோக்குடனும் – முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் BAPAPSIயுடன் இணைந்து புத்தகத் திருவிழா மற்றும் விற்பனையை 02.10.2017. முதல் 11.10.2017. வரை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சித் திடலில் நடத்தவுள்ளன. பொதுமக்களும், மாணவ-மாணவியரும் பயன்பெறும் வகையில் புத்தகத் திருவிழாவிற்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவில், BAPAPSI சார்பில் 100 புத்தக விற்பனை நிலையங்கள் ஒருங்கே அமைக்கப்படவுள்ளன. மேற்படி வளாகப் பகுதியில் அமைக்கப்படவுள்ள கலையரங்கத்தில், அன்றாடம் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி நிலையங்கள் பொறுப்பேற்று நடத்தித் தருவதுடன், அந்தந்தக் கல்வி நிறுவன மாணாக்கரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. வாகனங்களுக்கு வாகன நிறுத்துமிட வசதியும் செய்யப்படவுள்ளது.
புத்தகத் திருவிழாவின் துவக்க விழா 02.10.2017. அன்று மாலையில் நடைபெறவுள்ளது. ஏனைய நாட்களில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை 11.00 மணி முதல் 21.00 மணி வரை நடைபெறவுள்ளன. அனைத்துப் புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக முதன்முறையாக நடத்தப்படவுள்ள இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்களும், மாணவ-மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|