காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) மீன்பிடி தளம், அணுகுசாலையில், செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டதாக, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு – MEGA, பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம் அளித்துள்ளது.. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் - இத்திட்டத்தின் ஓர் அங்கமாக கான்க்ரீட் சாலை, தடை செய்யப்பட்டுள்ள உயர் அலை எல்லை (HTL) - குறைந்த அலை எல்லை (LTL) பகுதிகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து - மீன்வளத்துறை உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டதை அடுத்து - சாலைப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட இடத்தில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிமீறி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தொடர்ந்த வழக்கு - ஆகஸ்ட் 11 அன்று நீதிபதி திரு.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் திரு பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நடப்பது என்ன? சார்பாக வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் நேஹா மிரியம் குரியன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது விபரங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி - *புதிதாக எவ்வித பணிகளையும் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை (STATUS QUO) வழங்கினார். மேலும் - மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து (STATUS REPORT) - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது - அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
வழக்கின் எதிர்தரப்பு (மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மீன்வளத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர்), அனைவருக்கும் பதில்கள் தாக்கல் செய்ய நோடீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருமதி யாஸ்மீன் அலி - செவ்வாயன்று (செப்டம்பர் 19), சிங்கித்துறை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.
அதனை தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, இவ்வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 21, 2017 ; 2:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|