காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 3ஆவது மருத்துவராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.டி.ஹமீத் ஹில்மீ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தமிழக அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக காயல்பட்டினம் நெய்னார் தெருவை சார்ந்த டாக்டர் SD ஹமீது ஹில்மி இன்று பணியில் இணைந்தார்.
காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலராக (MEDICAL OFFICER) நீண்ட காலம் பணிப்புரிந்து வந்த டாக்டர் ஹில்மி அவர்களுக்கு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் ஆணை (TRANSFER ORDER) சில வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் - காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான மாற்று மருத்துவர் நியமனம் செய்யப்படும் வரை - டாக்டர் ஹில்மி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பணிபுரிந்துவந்தார்.
கடந்த செப்டம்பர் 13 அன்று - காயல்பட்டினம் மரைக்கார்பள்ளி தெருவை சார்ந்த சகோதரி டாக்டர் OL பாத்திமா பர்வீனுக்கு, தமிழக முதல்வர் - காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய ஆணை வழங்கியதை தொடர்ந்து - டாக்டர் ஹில்மி, இன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். மேலும் டாக்டர் OL பாத்திமா பர்வீன், நேற்று - காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பணியினை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு மருத்துவர் இடங்களும் நிரப்பப்பட வேண்டும் என - நடப்பது என்ன? குழுமம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இது சம்பந்தமாக, சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ள சுகாதாரத்துறை கோரிக்கைகள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தொடர்ந்து வைக்கப்பட்டு வந்துள்ளது.
அதன் பயனாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இரண்டாவது மருத்துவராக டாக்டர் செல்வின் - ஜூன் இறுதியில் நியமனம் செய்யப்பட்டார்.
டாக்டர் ஹில்மி தற்போது இணைந்துள்ளதை தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்கிறது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் டாக்டர் ஹேமலதா - NRHM திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து - அவ்விடத்தை காலியிடமாக அறிவித்து, அவ்விடத்தில் நிரந்தர மருத்துவரை நியமிக்க நடப்பது என்ன? குழுமம், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சகோதரர் டாக்டர் ஹமீது ஹில்மி அவர்களை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்த தமிழக அரசுக்கும், சுகாதார துறையின் அரசு முதன்மை செயலர் திரு ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களுக்கும், மருத்துவ சேவைத்துறையின் இயக்குனர் (DMS) திருமதி டாக்டர் பானு அவர்களுக்கும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் - டாக்டர் ஹமீது ஹில்மி அவர்களின் மருத்துவ சேவை மூலமாக பல்லாயிரங்கணக்கான மக்கள் பயன்கள் பெறவும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 20,2017; 3:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|