சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் இம்மாதம் 09ஆம் நாளன்று நடைபெற்றது. இரண்டாவது நிகழ்ச்சி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில். நேற்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!
சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது, இறைவன் நாடினால். நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
துவக்கமாக - இந்நிகழ்ச்சி சுபைதா மேனிலைப்பள்ளியில் இம்மாதம் 11ஆம் நாளன்று நடைபெற்றது. இரண்டாவது நிகழ்ச்சி, நேற்று (16.09.2017. சனிக்கிழமையன்று) சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னாள் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி திருமதி I.ஆபிதா சேக் B.Sc., B.Ed. - முன்னிலை வகித்து, நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார்.
ஆரம்பமாக, மாணவி செல்வி சித்தி ஹாலிதா - கிராஅத் ஓதி, நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் திருமதி செல்வநங்கை வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியை செண்பகவல்லி நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி C.சாந்தி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, வழக்கறிஞர் செல்வி M.சுகன்யா B.A.,B.L. சிறப்புரையாற்றினார்.
அதனை அடுத்து - திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் திருமதி M.ரவிமதி M.A. (English Literature) - மகளிருக்கு எதிரான குற்றங்கள்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் - மாணவிகளுக்கு ஒழுக்கத்தின் அவசியம், ஆசிரியர்களுக்கு மரியாதை, பாலியல் பிரச்சனைகள், நீல திமிங்கலம் விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருந்தன.
தொடர்ந்து - வழக்கறிஞர் திரு J.S.D.சாத்ராக் B.Sc.,B.L. சிறப்புரையாற்றினர்.
அவரின் உரையின் இடையில் - மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு சரியான பதில்கள் சொன்னவர்களுக்கு - பரிசுகளையும் வழங்கினார்.
மாணவிகள் சித்திஹாலிதா, ஆசியா நுஜைபா, ரிசானா, மரியம், கதிஜா பஹ்மிதா, மகிதியா, செனி ஆகியோர் பரிசுகள் வென்றனர்.
இறுதியாக - திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் திருமதி C.சாந்தி - விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அத்துடன் - நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நடப்பது என்ன? பெண்கள் குழும நிர்வாகிகளில் ஒருவரான திருமதி தஸ்லீமா அஜீஸ் நன்றியுரை வழங்கினார்.
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி M. செண்பகவல்லி M.A.,B.Ed. - நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துக்கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை - முன்னாள் நகர்மன்றத்தலைவர் I.ஆபிதா சேக் தலைமையில், நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் - திருமதி மொபா மாலிக், திருமதி நிலோபர் சாமு, திருமதி தஸ்லீமா அஜீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 16, 2017; 12:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|