வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள - சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகளை முடுக்கி விடுவது தொடர்பாக, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு, இன்ஷாஅல்லாஹ் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகளை முடுக்கி விடுவதற்காக – மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் 09.09.2017. சனிக்கிழமையன்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள – கட்சியின் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றார். தலைமையுரையைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் மாநாட்டு அறிமுகவுரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட, நகர நிர்வாகிகள் கருத்துரையாற்றினர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக இவர்கள் திட்டமிட்டு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதைக் கண்டித்ததோடு, இத்தருணத்தில் சிறுபான்மையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமென்றும், அதற்காக – முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்குத் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும், துவக்கமாக வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் நடத்தப்படவுள்ள “சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு” ஏற்பாட்டுப் பணிகளை மாவட்டத்தின் அனைத்து கிளைகளைச் சேர்ந்த அங்கத்தினரும் முழு முனைப்புடன் செயலாற்றிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.
கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மூத்த தலைவர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் – கட்சியின் தூத்துக்குடி மாவட்ட, காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
(தூ-டி. மாவட்ட செய்தி தொடர்பாளர்)
படங்கள்:
N.T.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ
(காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர்)
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
(இ.யூ.முஸ்லிம் லீக்)
|