பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், காயல்பட்டினம் நகரளவில் முதலிடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கு, ஹாங்காங்கிலுள்ள காயல் மாணவர் நலச் சங்கம் (Kayal Student Welfare Association - KSWA) அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுவது வழமை. அதன்படி, கடந்த கல்வியாண்டில் முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு கஸ்வா சார்பில் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூளிஹில் கரீம்.
நம் நகரளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா) அமைப்பின் சார்பில் அம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக 2002ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக பணப்பரிசும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வருடங்களாக மருத்துவம் , மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (Medical & Engineering Cut-off aggregate marks) மதிப்பெண், நமதூர் அளவில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு கஸ்வா அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர் மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவாக பணப்பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில், கடந்த கல்வியாண்டில் (2016-2017) நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி, இரண்டு கட்டமாக நடைப்பெற்றது.
மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு பரிசு
கடந்தாண்டில் நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்ற – எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவி முஷர்ரஃபா ஸுல்தானா, காயல்பட்டினம் நகரளவில் முதன்மதிப்பெண் பெற்ற மாணவியானார்.
04.09.2017. திங்கட்கிழமையன்று அப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவருக்கு, கஸ்வாவின் சார்பில் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு பாராட்டுக் கேடயமும், 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் அப்பரிசை மாணவியிடம் வழங்கினார்.
மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவு பரிசு
கடந்த (2016 – 2017) கல்வியாண்டில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் மாணவர் பி.ஏ.ஷம்சுத்தீன் ஸூஃபீ - திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ் மாணவர்களுள் நகரளவில் முதலிடமும், பொறியியல் படிப்புக்கான சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் பெற்றோருள், நகரளவில் முதலிடமும் பெற்றார்.
05.09.2017. செவ்வாய்க்கிழமையன்று, அப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், அவருக்கு, மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவு விருதும், 3 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. கம்பல்பக்ஷ் அல்ஹாஜ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் பரிசை வழங்க, மாணவர் சார்பாக அவரது குடும்பத்தினர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக - கஸ்வா அமைப்பினரையும், அவையோரையும் எல்.கே.மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்றார். கஸ்வா அமைப்பைப் பற்றி அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் இஸ்மாஈல் அறிமுகவுரையாற்றினார். ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து அதன் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விளக்கிப் பேசினார்.
கஸ்வா அங்கத்தினரான ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஹாஃபிழ் அப்துல் பாஸித், அப்துல் ஃபத்தாஹ், எஸ்.எம்.ஜெ.பாக்கர், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் ஆகியோருடன், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For Kayal Students Welfare Association - Hong Kong (KSWA)
T.S.T P.O. Box. 95361
Kowloon - Hong Kong
Email : info@kswa.org / kswa98@gmail.com
தகவல்:
ஹாஃபிழ் M.I.யூஸுஃப் ஸாஹிப்
(பிரதிநிதி – கஸ்வா)
[செய்தி திருத்தப்பட்டது @ 12:27 / 14.09.2017.] |