SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும், இதுநாள் வரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கருத்திற்கொண்டு, விரைந்து நடவடிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டணத்தைச் சார்ந்த மீராத் தம்பி என்பவர் கடந்த மாதம் SRM பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்த போது தூத்துக்குடியில் வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையைச் சார்ந்த இருவரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் SDPI கட்சியின் சார்பில் காயல்பட்டணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ASP அவர்களின் வாக்குறுதிப்படி குறிப்பிட்ட மூன்று நாட்களுக்குள் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் வழக்கின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ( ASP ) திரு. செல்வநாகரத்தினம் அவர்களை SDPI கட்சியின் நிர்வாகிகள் 11 - 9 - 2017 திங்கள்கிழமை அன்று சந்தித்தனர்.
ASP நம்மிடம் பேசுகையில், பேருந்தில் இருவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாகவே குற்றவாளிகள் குடிபோதையில் அவரை கொன்றதாகவும் வேறு எந்தகாரணமுமில்லை என்று குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறினார். இச்சந்திப்பில் SDPI கட்சியினருடன் மீராத் தம்பி அவர்களின் உறவினர்களும் உடனிருந்தனர்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். என்பதே SDPI கட்சியின் கோரிக்கை என்பதை அரசு துறைகளில் உள்ள அதிகாரிகளிடம் கோரிக்கையாக SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் நிர்வாகிகளும், காயல் நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|