டெல்லியில் சர்வதேச அணிகள் பங்கேற்கும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் – தமிழ்நாட்டின் ஒரே அணியாக விடையாடத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணி, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.
தற்போது சென்னையிலிருக்கும் அவ்வணி, இன்று 22.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ‘தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்’ வண்டியில் புதுடில்லி புறப்படுகிறது.
சர்வதேச போட்டியில் விளையாட இரண்டாவது முறையாகத் தகுதிபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணியை, பள்ளியன் முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும், நகர பொதுமக்களும் ஊக்கப்படுத்தி – உற்சாகத்துடன் வழியனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, தேவகோட்டை டி பிரிட்டோ மேனிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, 05.02.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்ற அணியாகத் தேர்வு பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாகவே இவ்வணி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் - பள்ளிகளுக்கிடையிலான சர்வதேச அளவிலான சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட, இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
அப்துல் காதிர் நெய்னா
படங்கள்:
நெய்னா
|