சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில், 09.09.2017. அன்று நடைபெற்றுள்ளது. இதில் திரளான மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுபைதா பள்ளிக்கூடத்தில் நடந்தது! நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு!
சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது, இறைவன் நாடினால். நடப்பது என்ன? குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.
துவக்கமாக - இந்நிகழ்ச்சி இன்று மாலை, சுபைதா மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் திரளாக கலந்துக்கொண்டனர். அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி சாந்தி, தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை கிராஅத் ஓதி, மாணவி செல்வி ஆயிஷா ஜுவைரியா துவக்கிவைத்தார். சுபைதா மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீர் பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார்.
திரு JSB சாத்ராக் B.Sc.,B.L., செல்வி எம்.சுகன்யா B.A.,B.L., திருமதி சந்திரிக்கா (தலைமை காவலர்), திருமதி செல்வராணி (தலைமை காவலர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்கள் - தங்கள் உரையில், தாங்கள் அனுபவப்பூர்வமாக மாணவ சமுதாயம் மத்தியில் கண்ட சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து, விரிவாகவும், ஆழமாகவும் விளக்கினர்.
சமூக ஊடகங்களில் பலரை அச்சுறுத்தி வரும் நீல திமிங்கலம் (BLUE WHALE) விளையாட்டு குறித்தும், எச்சரிக்கை வழங்கும் முகமாக மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் B.Sc.,B.Ed. நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மகளிர் பிரிவு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|