டெல்லியில் சர்வதேச அணிகள் பங்கேற்கும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் – தமிழ்நாட்டின் ஒரே அணியாக விடையாடத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணி, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.
காயல்பட்டினத்திலிருந்து புறப்பட்டு, சென்னை சென்றிருந்த அவ்வணி வீரர்கள், நேற்று (12.09.2017. செவ்வாய்க்கிழமை) 22.00 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ‘தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்’ வண்டியில் புதுடில்லி புறப்பட்டுச் சென்றனர்.
சர்வதேச போட்டியில் விளையாட இரண்டாவது முறையாகத் தகுதிபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணியை, பள்ளியன் முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும், நகர பொதுமக்களும் ஊக்கப்படுத்தி – உற்சாகத்துடன் வழியனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நேற்று 21.15 மணி முதல் அங்கு திரண்டு வந்த முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும் – புறப்பட்டுச் செல்லும் இளம் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
சென்னையிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் “காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் – KCGC” சார்பில், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பல்லாக் சுலைமான் வீரர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து வாழ்த்தினார்.
தகவல் & படங்கள்:
அப்துல் காதிர் நெய்னா
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:19 / 13.09.2017.]
|