சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திட, தனி பிரிவு ஒன்றை துவங்கியுள்ளது “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு”. இது குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:
சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நமதூர் மக்களிடம் புதிய / மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தனித்த சிந்தனைத்தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.
பெரிதாக அறியப்படாத சிந்தனையாளர்கள் & ஆளுமைகளை அறிமுகம் செய்வதையும், ஆக்கப்பூர்வமான பல சமூக முன்னேற்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, இதுவரை 17 நிகழ்வுகளை நமதூரில் சிறப்பான முறையில் நடத்தியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இந்த அமர்வுகளுள் பெரும்பாலானவை பெரியவர்களுக்காகவே நிகழ்ந்த போதிலும், சிறார்களுக்காக நான்கு தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நமது அடுத்த தலைமுறையினரான இன்றைய குழந்தைகளிடம் - கலை, இலக்கியம், பண்பாடு, மரபு வரலாறு & இயற்கைக் கல்வி ஆகியவற்றை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பொறுப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாய், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று ஓர் தனிப் பிரிவை இவ்வமைப்பின் கீழ் துவங்கியுள்ளோம்.
இதற்கு முன்னோட்டமாக அமைந்திட்ட அந்த நான்கு நிகழ்வுகள் கீழ் வருமாறு:
1) பிரட் & அல்லி (Bread and Alley) & தி கோரஸ் (The Chorus) ஆகிய குறும்படங்கள் திரையிடல்
(14.11.2016 & 15.11.2016; முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=18468
2) கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு படமான “தாரே ஜமீன் பர்” திரையிடல்
(10.12.2016; ரஃப்யாஸ் ரோஸரி)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=18566
3) மாணவர்களின் மன நெருக்கடியை விளக்கும் “மீண்டும் வருகிறேன்” திரையிடல்
(18.01.2017; முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=18702
4) கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல் முகாம்
(09.05.2017; அய்ந்து பள்ளிகளின் மாணவியர்)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218
இவற்றுள், சென்ற மே மாதம் சிறப்பாக நடந்தேறிய “கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல்” முகாமில் ஆர்வத்தோடு பங்கேற்ற அன்பு மழலைகளின் பசுமையான நினைவுகளோடு, “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரிடப்பட்டுள்ள எழுத்து மேடை மையத்தின் குழந்தைகளுக்கான பிரிவின் உதயத்தை அறிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
“கண்ணும்மா முற்றம்” - பெயர் காரணம்!
இன்றைய உறவு நிலையில், கண்ணும்மாக்களின் (தாய் வழிப் பாட்டிகள்) இடத்தை தொலைக்காட்சிகள் முதல் அலைபேசிகள் வரை அனைத்து வகை மின்னணு ஊடகங்களும் கருவிகளும் கைப்பற்றிக்கொண்டதோடு, பெரியவர்களின் இயந்திர வாழ்க்கைக்கு ஒன்றும் அறியாத இளவல்களையும் இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
“அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோபமுகத்தோடே இழுத்து வைத்துச் சோறு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், அழுது அழுது கஷ்டங்களைப் புரியவைக்கவுமான பேராற்றலை வழிவழி வந்த பட்டறிவின் காட்டாறு பாட்டிக்குப் புகட்டியிருந்தது. அவற்றை நழுவ விட்டுவிட்டது சமகாலச் சூழல்.”- எஸ். வி. வேணுகோபாலன், எழுத்தாளர்.
கண்ணும்மாக்களின் பாசமும் அரவணைப்பும் அபரிமிதமானது. அவர்களுடனான பொழுதுகளின் நினைவுகள் என்றுமே நம் அனைவரின் மனதிலும் உறைந்திருக்கும். கதை, பாட்டு, கவிதை, விடுகதை & விளையாட்டுகள் என குழந்தைகளை மகிழ்விப்பதில் அவர்களின் பங்கு அளவற்றது.
எல்லாவித குடும்ப தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு குழந்தைகளுக்காகவென்றே இயல்பாகவே நியமிக்கப்பட்ட அன்பின் மொத்த திரட்டுதான் கண்ணும்மாக்கள்.
குழந்தை வளர்ப்பின் முதுநிலைக்கலைஞர்களான அவர்களை நன்றியோடு நினைவு கூறும் விதமாகவும், குழந்தைகளை கண்ணும்மாக்களின் இறக்கை கதகதப்பில் மீட்டுவதற்காகவுமே இந்த பெயரை அர்ப்பணிக்கின்றோம்.
திசைமாறிச் செல்லும் சிறார்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக, “கண்ணும்மா முற்றம்” எனும் இந்த தனித்துவமான பிரிவின் மூலம் – இயற்கை கல்வி முகாம்கள்; நூல் அறிமுகங்கள்; சிறப்பு திரையிடல்கள் & கதை சொல்லல், நாடகங்கள் & பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திட முனைந்துள்ளோம்.
சிறார்களுக்கான அடுத்த நிகழ்வு
இந்த தனி பிரிவின் அய்ந்தாம் நிகழ்வு, முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி இணைவில் முப்பெரும் விழாவாக நடத்திட முயற்சிக்கிறோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.
செய்தியாக்கம்:
சாளை பஷீர்
அ.ர. ஹபீப் இப்றாஹீம்
|