எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் 08.10.2017 ஞாயிறன்று நடைபெறும் சிறப்பு இயற்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெற, காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் (6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டும்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை & அழைப்பிதழ்:
நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நகர மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் தனித்த சிந்தனைத்தளமாக விளங்கும் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு, சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் தனி பிரிவு ஒன்றை சமீபத்தில் துவங்கியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
கண்ணும்மா முற்றம் - நிகழ்வு # 5
இவ்வமைப்பின் அடுத்த நிகழ்வினை, முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் மாணவர்களுக்கான முப்பெரும் விழாவாக - 08.10.2017 ஞாயிறன்று (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிட்டுள்ளோம்.
இந்நிகழ்வுக்கான அழைப்பிதழ் கீழே:
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 19-வது நிகழ்வாகவும், “கண்ணும்மா முற்றம்” பிரிவின் 5 வது அமர்வாகவும் அமையும் இந்நிகழ்வில், மரக்கன்றுகள் நடுதல், சூழலியல் இலக்கிய மன்றம் & இயற்கைக் கல்வி முகாம் ஆகியன இடம்பெறுகின்றன.
ஏன் இந்த முகாம்?
தோட்டங்களையும் - காடுகளையும் அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி, ஒரு முறையில்லா வாழ்வை நோக்கி மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான். இதனால் ஏற்படும் சீர்கேடுகளை, இனி வரும் தலைமுறையிலிருந்தாவது சரிசெய்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நகரின் பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த தெளிவான அறிவை வளர்ப்பதும், பல்லுயிரிகளைப் பேண வேண்டிய விழிப்புணர்வை முறையாக ஏற்படுத்துவதுமே இம்முகாமின் முதன்மை நோக்கமாகும்.
சென்ற ஆண்டு (30.10.2016) சிறப்பாக நடந்தேறிய “இயற்கையோடு இணைவோம்” இயற்கைக் கல்வி முகாமின் தொடர்ச்சியாக அமையும் இந்நிகழ்வில், சூழலியல் இலக்கியம் எனும் தனிப் பகுதி முதன்முறையாக சேர்க்கப்படுகிறது. புகழ்பெற்ற “காடோடி” புதினத்தின் ஆசிரியர் திரு நக்கீரன் அவர்களின், “தமிழ் ஒரு சூழலியல் மொழி”, என்னும் கூற்றினை நன்கு உணர்ந்தவர்களாய், தமிழில் வெளியாகும் சில சூழலியல் சார்ந்த சிறார் நூல்கள் & கதைகள் குறித்த விவாத அரங்கும் & கதைசொல்லல் நிகழ்வும், இம்முகாமில் இடம்பெறவிருக்கின்றன.
பள்ளிகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!!!
காயல்பட்டினத்தின் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆண் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் இந்நிகழ்வில், மதுரையை சார்ந்தவர்களான பிரபல பறவை ஆர்வலர் திரு இரவீந்திரன் நடராஜன், சிறுதானிய விவசாயிகள் திரு கார்த்திகேயன் பார்கவிதை & திரு விக்னேஷ் செல்வம் ஆகியோர் பயிற்சியாளர்களாக பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் சுமார் 20 மாணவர்களை மாத்திரம் முன்பதிவு செய்யும் பணியினை, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பள் ளிகள் - வரும் நாட்களில் துவங்கவுள்ளன. நான்கு பள்ளிகளில் இருந்து மொத்தம் 80 மாணவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு, மாணவர்கள் தங்களின் பள்ளியையோ / நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையோ (9962841761 / 9902001223 / 9486655338) அனுகலாம்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1> “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!! நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!!
(15.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19700)
2> “இயற்கையோடு இணைவோம்!” - கத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைவில் சிறப்பு முகாம்! 3 பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்பு!!
(30.10.2016; http://www.kayalpatnam.com/shownews.asp?id=18428)
3> பறவை ஆர்வலர் திரு இரவீந்திரன் நடராஜன் அவர்களின் நேர்காணல்
(23.07.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=200)
செய்தியாக்கம்:
சாளை பஷீர்
அ.ர. ஹபீப் இப்றாஹீம் |