காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நடத்திய – போதைப் பொருள் தீவினைகள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழிப்புணர்வுரையாற்றினார். நகர பள்ளிகளின் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகர் முன் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சிகளை, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகாவின் சமூக ஊடகப்பிரிவு - நடப்பது என்ன? - இறைவன் நாடினால் - நடத்திட திட்டமிட்டுள்ளது.
அவ்வரிசையின் துவக்கமாக, பாதுகாப்பு 1.0 என்ற தலைப்பில் - போதை பொருட்களின் தீமை குறித்த நிகழ்ச்சி, இன்று (7-11-2017) மாலை 3:30 மணியளவில் - ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) வளாகத்தில் - நடைபெற்றது.
துவக்கமாக - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஹாபிழ் அப்துல்லாஹ் சாஹிப் - இறைமறையில் இருந்து வசனங்களை ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து, நிகழ்ச்சிகள் துவங்கின.
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, ஹாஜி எஸ்.ஏ.மொஹிதீன் - வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து - ஆறுமுகநேரி காவல்நிலையத்தின் ஆய்வாளர் திரு சிவலிங்கம் - மாணவர்களுக்கு, தனது எளிய நடையில், அறிவுரைகளை வழங்கினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், போதைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
எம்.என்.அஹமது சாஹிப் - நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து ஆழமாக எடுத்துரைத்தார்.
அடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன் IPS - போதை பழக்கத்தின் தீமைகள் குறித்தும், சிறு வயதிலேயே அதன் தீமைகள் பற்றி எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், குட்டி கதைகளை கூறி எடுத்துரைத்தார்.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் தலைவர் பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் - நன்றியுரை கூற, தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மெகா அமைப்பின் _துணைத்தலைவர் ஏ.எஸ்.புஹாரி, செயலாளர் எம்.ஏ.புஹாரி (48) மற்றும் இதர நிர்வாகிகள், அங்கத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக, எல்.கே.மேனிலைப்பள்ளியை சார்ந்த NSS, NCC மற்றும் JUNIOR RED CROSS பிரிவு மாணவர்கள், சிறப்பு விருந்தினருக்கு - மனதை தொடும் விதத்தில், வரவேற்பு வழங்கினர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மற்றும் முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி ஆகியவற்றில் இருந்து சுமார் 700 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 7, 2017; 7:30 pm]
[#NEPR/2017110702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |