முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில், 07.11.2017 செவ்வாயன்று, கதைசொல்லல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில், மிதிவண்டியில் நாடு முழுவதும் பயணிக்கும் பிரபல கதைசொல்லி குமார்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:
கதைசொல்லல் நிகழ்வு
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில், 07.11.2017 செவ்வாய் கிழமையன்று, கதைசொல்லல் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.
மாறுபட்ட நிகழ்வுகளை நடத்தும் பள்ளி!
மாணவ-மாணவியருக்கான மாறுபட்ட முகாம்களும் & புதுமையான கல்வி நிகழ்வுகளும், முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அதிலும் குறிப்பாக, கதைசொல்லல் அமர்வுகளுக்கு, இப்பள்ளி நிர்வாகம் பெரிதும் முக்கியத்தும் அளித்து வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டில் நடைபெற்ற மூன்றாவது கதைசொல்லல் நிகழ்வாக இது அமைகிறது.
நிகழ்வு எண் 21
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் ‘கண்ணும்மா முற்றம்’ குழந்தைகளிடம் – இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.
இந்த கதைசொல்லல் அமர்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 21-வது நிகழ்வாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 6-வது நிகழ்வாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிதிவண்டியில் பயணிக்கும் கதைசொல்லி!
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு. குமார்ஷா, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி. கதைசொல்வதில் வித்தகரான இவர், குழந்தைகளுக்கு கதைகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் - நாடு தழுவிய மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜுலை 07 அன்று பொள்ளாட்சி ஆலியாறில் துவங்கிய இவரது பயணத்தில், பல்வேறு ஊர்களின் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்து கதைசொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பயணத்தின் 123-வது நாளில் - காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளிக்கு வருகைத் தந்தார்.
கூட்டுக் குடும்பமுறை சிதைவின் பிரதிபலிப்பாக, தாத்தா-பாட்டிகளிடம் கதைகளைக் கேட்கும் வாய்ப்பினை இன்றைய குழந்தைகள் இழந்துள்ளனர் என்பதும், அதன் விளைவாக - கையடக்க கருவிகளிடம் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பதுமே, இப்பயணத்தை மேற்கொள்ள - பெரிதும் ஊக்குவித்ததாக கூறுகிறார் திரு குமார்ஷா.
சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களும் & 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுமாக, சுமார் 450 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். திரு. குமார்ஷா கூறிய கதைகள் அனைத்தும், குழந்தைகளை குதூகலப்படுத்தியதோடு நில்லாமல் - சிந்திக்கவும் வைத்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் துனை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, முறையே அதற்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார்.
திரு. குமார்ஷாவின் வருகையை தெரிவித்து - அவரின் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்த திருநெல்வேலியை சேர்ந்த ’சிரட்டை சிற்பி’ ஆனந்த பெருமாளுக்கு - நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக நன்றியினை உரித்தாக்குகிறோம்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)
2> கதைசொல்லல் நிகழ்வோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
3> “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!
(15.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19700)
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் & ஒளிப்படங்கள்:
கே.எம்.டீ.சுலைமான்
செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (சஊதி அரபிய்யா - தம்மாம்)
|