அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், நடத்தப்பட்ட தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டியில், உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர் முதலிடம் பெற்று, 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 04, 05 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில், தமிழ்நாடு மாநிலம் தழுவிய - திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. துவக்க நாளன்று தகுதிச் சுற்றும், நிறைவு நாளன்று இறுதிச் சுற்றுப் போட்டியும் நடைபெற்றன.
முன்னதாக, போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், தமிழகம் முழுக்க பயணித்து – போட்டிக்கான அழைப்பிதழ்களை மத்ரஸாக்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வந்திருந்தனர். அதன்படி, 230 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றுள் – வயது வரம்பு உள்ளிட்ட போட்டி விதிமுறைகளின் படி சில விண்ணப்பங்கள் நீங்கலாக இதர அனைத்தும் ஏற்கப்பட்டன.
நாகர்கோவில், காயல்பட்டினம், ஆத்தூர், மேலப்பாளையம், கீழக்கரை, தொண்டி, எஸ்.பீ. பட்டினம், இளையாங்குடி, காரைக்குடி, பன்னூர், திருச்சி, தாராபுரம், திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, கோயமுத்தூர், சென்னை, தர்மபுரி, வாணியம்பாடி, உமராபாத், பேர்ணாம்பட், பள்ளிகொண்டா, காதர்பேட், குடியாத்தம், சேலம், பள்ளப்பட்டி, அதிராம்பட்டினம், என – தமிழகத்தின் 20 மாவட்டங்களிலிருந்து – ஒரு சில பள்ளிக்கூடங்கள் உட்பட 60 மத்ரஸாக்களைச் சேர்ந்த 188 ஹாஃபிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர். தகுதிச் சுற்றின் நிறைவில், இறுதிச் சுற்றுக்குத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதிச் சுற்றுப்போட்டி 05.11.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 19.00 மணி வரை நடைபெற்றது. துவக்கச் சுற்றுகள் & இறுதிச் சுற்றுப் போட்டிகளில் – மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் ஷப்பீர் அஹ்மத் உமரீ, மவ்லவீ ஹாஃபிழ் நூருல்லாஹ் முஈன் மதனீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ நவ்ஃபல், மவ்லவீ ஹாஃபிழ் காரீ முத்தஸ்ஸிர் (கனகபுர), மவ்லவீ ஹாஃபிழ் காரீ ழியாஉர் ரஹ்மான், மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல் ஹாதீ பாக்கவீ, ஹாஃபிழ் இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் கஸ்ஸாலீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ மளீஉர்ரஹ்மான் உமரீ (பேர்ணாம்பட்டு), மவ்லவீ ஹாஃபிழ் ஜக்கரிய்யா அல்தாஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஷுஅய்ப் உமரீ, ஆகியோர் நடுவர்களாகவும், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஒருங்கிணைப்பாளர்களாகவும் கடமையாற்றினர்.
20.00 மணியளவில் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், பள்ளி துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்க நாளில் – தஃவா சென்டர் மேலாளர் டீ.வி.எஸ்.ஜக்கரிய்யா, நிறைவு நாளில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
பள்ளி செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அனைவரையும் வரவேற்றதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
ஹிஃப்ழுப் போட்டிகளில் நடுவர்களாகவும் - துணை நடுவர்களாகவும் கடமையாற்றியோருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் நினைவுப் பரிசுகள் - பள்ளி நிர்வாகிகளால் வழங்கப்பட்டன.
திருக்குர்ஆனின் 5 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள், 30 ஜுஸ்உகள் என மொத்தம் 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரியவர்களாக பத்து பேர் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3 பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மர் பட்டியலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் விபரமும் வருமாறு:-
முதற்பரிசுகளுக்கு காயல்பட்டினம் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் குடும்பத்தினரும், இரண்டாம் பரிசுகளுக்கு அ.க. குடும்பத்தினரும், மூன்றாவது பரிசுகளுக்கு எஸ்.ஐ.தஸ்தகீர் குடும்பத்தினரும் அனுசரணையளித்திருந்தனர்.
மாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற இம்மாணவர்களிடம் போட்டி ஏற்பாட்டாளர்கள் நேர்காணல் செய்து, திருக்குர்ஆனின் சில பகுதிகளை ஓதிக் காண்பிக்கச் செய்து, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அதுபோல, போட்டிகள் நடைபெற்ற இரண்டு நாட்களிலும் – நடுவர்களான காரீகள் பங்கேற்பில், திலாவத்துல் குர்ஆன் அமர்வுகளும் நடைபெற்றன.
05 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள், 30 ஜுஸ்உகள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு பின்வரும் விபரப்படி வெற்றிப் பரிசுகள் வழங்கப்பட்டன.
30 ஜுஸ்ஊகள் பிரிவில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றோருக்கு தலா 1,500 ரூபாயும், 15 & 05 ஜுஸ்உ பிரிவுகளில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றோருக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கப் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இவ்வாண்டில் நடத்தப்பட்ட இப்போட்டியில், வட ஆற்காடு மாவட்டம் ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி - சிறந்த பங்கேற்பளித்த மத்ரஸாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக BEST PERFORMANCE MADRASA AWARD வழங்கப்பட்டது. அவ்விருதை, நகரப் பிரமுகர் குளம் இப்றாஹீம் – கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பரிசு பெற்ற அனைவருக்கும் பணப்பரிசுகளுடன் - நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் வழங்கினர்.
போட்டிக் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவு நாளன்று, மகளிருக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 மகளிர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.
போட்டியின் அசைபடப் பதிவை,
https://youtu.be/VYjR8NH7BRg
https://youtu.be/62yRKtem2CY
https://youtu.be/MmRmRXQbFxg
https://youtu.be/wyzMLYWoRUo
ஆகிய இணையதள பக்கங்களில் காணலாம்.
தகவல் உதவி:
M.M.முஜாஹித் அலீ
படங்களுள் உதவி:
சாளை ஜியாஉத்தீன் |