காயல்பட்டினம் கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றி ஏலம் விட அரசு முடிவு செய்துள்ள நிலையில், வெட்டப்படும் ஒரு மரத்திற்குப் பகரமாக அப்பகுதிகளில் 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த கீழ சித்தன் தெரு வேப்பமரம் ஒன்றை அகற்றிட - கடந்த ஜூலை மாதம், நடப்பது என்ன? குழுமம், வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்) இடம் - மனு கொடுத்திருந்தது.
அதன் அடிப்படையில், அந்த மரத்தையும், நெய்னார் தெருவில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த மற்றொரு மரத்தையும் அப்புறப்படுத்த - கடந்த வாரம், திருச்செந்தூர் வருவாய்த்துறை கோட்டாட்சியர், ஆணை பிறப்பித்துள்ளார்.
மரங்கள் - நம் சுற்றுச்சூழலில் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மரம் அப்புறப்படுத்தப்படும் போது அதற்கு பதிலாக 10 மரங்கள் நடவேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இதனை - தேசிய பசுமை தீர்ப்பாயமும், தனது தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது.
எனவே - தற்போது நகரில் அப்புறப்படுத்தப்படவுள்ள 2 மரங்களுக்கு பதிலாக 20 மரங்கள், அப்புறப்படுத்தப்படும் இடங்கள் உட்பட அதற்கு அருகாமை இடங்களிலும் நடப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்து - வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்), வட்டாச்சியர் (திருச்செந்தூர்), ஆணையர் (காயல்பட்டினம் நகராட்சி) மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) ஆகியோரிடம் - இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும் - அவ்வாறு மரங்கள் நடவும், நட்ட மரங்களை பராமரிக்கவும் - நடப்பது என்ன? குழுமம் - ஏற்பாடு செய்யும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 7, 2017; 11:45 am]
[#NEPR/2017110701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|