காயல்பட்டினத்தில், பொதுமக்களுக்கு அவசரகாலத்தின்போது தேவைப்படும் மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, நகர மருத்துவர்களுடன் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் கலந்துரையாடியுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரம் - காயல்பட்டினம் ஆகும்.
40,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இவ்வூரில் - மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய போதிய வசதிகள் இல்லை என்ற குறைபாடு பல ஆண்டுகளாக உள்ளது. குறிப்பாக - அவசரகால மருத்துவ உதவியினை (EMERGENCY MEDICAL CARE) காயல்பட்டினத்தில் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது என்ற எண்ணம், நகரில் பரவலாக காணமுடிகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில் - மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தில் அவசர மருத்துவ உதவி (EMERGENCY MEDICAL CARE IN KAYALPATTINAM) என்ற தலைப்பில் மருத்துவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி (SOLUTION-BASED INTERACTION WITH DOCTORS) - பிப்ரவரி 25 - ஞாயிறு அன்று காயல்பட்டினத்தில் நடந்தது. “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் கூட்டத்தின் நோக்கம், மருத்துவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் குறித்து விளக்கிப் பேசினர்.
ஹாஜியப்பா பள்ளி எதிரில் உள்ள துஃபைல் வணிக வளாக ஹனியா சிற்றரரங்கில் நடந்த இந்நிகழ்வில், காயல்பட்டினம் பூர்வீக மருத்துவர்கள் கலந்துக்கொண்டு, தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இக்கலந்துரையாடலில் கீழ்க்காணும் விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது:
// அவசர (EMERGENCY) மருத்துவ உதவி, அவசரம் இல்லா (NON-EMERGENCY) மருத்துவ உதவி ஆகியவற்றை பாகுபடுத்தி பொதுமக்களுக்கு விளக்குவது
// இல்லங்களுக்கு சென்று மருத்துவ உதவி வழங்குவதன் சாத்தியக்கூறுகள் (HOUSE VISITS)
// 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவிகள் வழங்க அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்ஸ் வசதி (FULLY-EQUIPPED AMBULANCE)
// நகரின் மூன்று பிரதான மருத்துவமனைகளில் அவசர மருத்துவ உதவி மையங்களை மேம்படுத்துவது (EMERGENCY CARE MEDICAL UNIT)
இக்கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட கருத்துக்களை மையமாக கொண்டு, நகரில் அவசர மருத்துவ உதவியை மேம்படுத்த - இறைவன் நாடினால் - நடப்பது என்ன? குழுமம் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான செயல்திட்டத்தை இறுதி செய்ய, துறை சார்ந்த வல்லுனர்களுடன் கலந்தாலோசனைகள் துவங்கப்பட்டுள்ளன.
நடப்பது என்ன? குழுமத்தின் குறுகிய காலவகாச அழைப்பை ஏற்று, இந்நிகழ்வில் ஆர்வமாக கலந்துக்கொண்டு, தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர்கள் - டாக்டர் அபுல்ஹசன், டாக்டர் முஹம்மது தம்பி, டாக்டர் ஜாபர் சாதிக், டாக்டர் இத்ரீஸ், டாக்டர் மெஹபூப் சுபுஹானி, டாக்டர் கிஸார், டாக்டர் அபூபக்கர் (UK), டாக்டர் அபூபக்கர், டாக்டர் வஹீதா, டாக்டர் சரஸ்வதி, டாக்டர் ஃபாஸி, டாக்டர் ஹில்மி, டாக்டர் ஷிஹாப்தீன், டாக்டர் முஹம்மத் இர்ஷாத், டாக்டர் உனைஸ் மௌலானா, டாக்டர் முஹம்மத் முஹைதீன் - ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 28, 2018; 8:45 am]
[#NEPR/2018022801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|